நடிகை சோனாலி போகத்துக்கு போதைப்பொருள் கொடுத்து கொலை..? உதவியாளர்கள் இருவர் கைது


நடிகை சோனாலி போகத்துக்கு போதைப்பொருள் கொடுத்து கொலை..? உதவியாளர்கள் இருவர் கைது
x

சோனாலி போகத்துக்கு வலுக்கட்டாயமாக போதைப்பொருள் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

பனாஜி,

அரியானா மாநில பாஜக பிரமுகர் சோனாலி போகத் கொலை தொடர்பாக அவரது உதவியாளர்கள் 2 பேரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகை சோனாலி போகத் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர். டிக்டாக் மூலம் பிரபலமான பாஜகவை சேர்ந்த சோனாலி போகத் ஆகஸ்ட் 22 அன்று கோவாவிற்கு வந்திருந்தார். அவருடன் இரு உதவியாளர்கள் சக்வானும் வாசியும் உடன் வந்திருந்தனர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 23 அன்று காலை அவர் தன் அறையில் மயங்கி கிடந்தார். உடனே வடக்கு கோவா மாவட்டத்தில் அஞ்சுனாவில் உள்ள செயின்ட் அந்தோணி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக முதல்கட்டமாக தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனையில் சோனாலி போகத் உடலில் அப்பட்டமான காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் போதை மருந்தை எடுத்துக் கொண்டதாக கோவா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாஜக தலைவர் சோனாலி போகத்துக்கு போதைப்பொருள் கொடுத்ததால் தான் அவர் மரணம் அடைந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, அவரது உதவியாளர்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து கோவா போலீஸ் ஐ.ஜி ஓம்வீர் சிங் பிஷ்னோய் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

அவரது உதவியாளர்களில் ஒருவன் சோனாலி போகத்துக்கு வலுக்கட்டாயமாக போதைப்பொருள் கொடுத்தது தெரிய வந்தது. அவருக்கு சில ரசாயனம் கொடுக்கப்பட்டது. அதன்பின் அவர் சுய கட்டுப்பாட்டில் இல்லை.

அதிகாலை 4:30 மணியளவில் அவர் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, அந்த நபர் அவரை கழிப்பறைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இரண்டு மணி நேரம் என்ன செய்தார்கள் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.

தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.இந்த மருந்தின் தாக்கத்தில் அவர் இறந்ததாக தெரிகிறது. அவரது உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு தெரிவித்தார்.

சோனாலி போகத் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுதிர் சக்வான் மற்றும் சுக்விந்தர் வாசி ஆகிய இருவரின் பெயரையும் சோனாலி போகத்தின் சகோதரர் ரிங்கு டாக்கா காவல்துறையில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் மாரடைப்பால் சோனாலி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இந்த நிலையில் சோனாலி கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.


Next Story