சோலார் பேனல் வழக்கு; விசாரணை அதிகாரி தண்டவாளம் அருகே மர்ம மரணம்
கேரளாவில் சோலார் பேனல் ஊழல் வழக்கை விசாரித்த காவல் உயரதிகாரியின் உடல் ரெயில்வே தண்டவாளம் அருகே கிடந்தது.
கோழிக்கோடு,
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள செங்கனூரை சேர்ந்த சரிதா நாயர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்பட பல நகரங்களில் சோலார் சிஸ்டம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர் 2012-ம் ஆண்டு போலீசில் அளித்த புகாரில், சோலார் பேனல் அமைத்து கொடுப்பதாக கூறி சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரூ.42.70 லட்சம் மோசடி செய்து விட்டதாக புகார் அளித்தார். பணம் திருப்பி கேட்டபோது மிரட்டினர் என்று மஜீத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் சரிதா நாயர் முதல் மற்றும் 2-ம் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு 2018-ம் ஆண்டு, ஜனவரி 25-ந்தேதி முதல் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில், சரிதா நாயரை கோழிக்கோடு மாவட்டம் கசபா போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், கோழிக்கோடு முதன்மை நீதிபதி கே. நிம்மி அளித்த தீர்ப்பில், சோலார் பேனல் மோசடி வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 4 விதமான குற்றச்சாட்டுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால், இந்த வழக்கில் முதல் குற்றவாளியான பிஜு ராதாகிருஷ்ணன் மீதான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம், 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பி. மணிமோன் விடுவிக்கப்பட்டார்.
சரிதா நாயருக்கு எதிராக ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோழிக்கோடு நீதிமன்றங்களில் ஏற்கெனவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சூரிய ஒளி தகடு மோசடி மட்டுமல்லாது கேரளாவில் சில முக்கிய அரசியல் தலைவர்கள் மீது பாலியல் புகார் கூறி சரிதா நாயர் பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்நிலையில், சோலார் பேனல் ஊழல் வழக்கை விசாரித்து வந்த ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரெண்டு ஹரிகிருஷ்ணன் ரெயில் தண்டவாளம் அருகே உயிரிழந்து கிடந்துள்ளார். அவர் ரெயில் மோதி பலியாகி இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
அவரது உடல் ஹரிபாதம் பகுதியில் ஈவூர் என்ற இடத்தில் ரெயில்வே கிராசிங் பகுதியில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இன்று அதிகாலை 12.30 மணியளவில் சம்பவம் பற்றி தெரிய வந்தது. அவரது கார், அந்த பகுதிக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதில் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
எனினும், போலீசார் அதுபற்றிய விவரங்களை வெளியிடவில்லை. இதுபற்றி ஹரிகிருஷ்ணனின் உறவினர்கள் கூறும்போது, அவர் கடுமையாக மனதளவில் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார் என கூறினர்.
பெரும்பாவூர் துணை போலீஸ் சூப்பிரெண்டாக பணியாற்றிய அவர், சோலார் பேனல் வழக்கில் பலமுறை குற்றச்சாட்டுக்கு ஆளானார். 2013-ம் ஆண்டு ஜூலையில், சரிதா நாயரை அவர் கைது செய்தபோது, விசாரணை அதிகாரியை ஆலோசிக்காமல் நடவடிக்கை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
சரிதா நாயரின் லேப்டாப்புடன் தொடர்புடைய பல்வேறு சர்ச்சைகளிலும் அவர் குற்றச்சாட்டுக்கு ஆளானார். வழக்கை விசாரித்த நீதிமன்ற ஆணையமும் அவரை விமர்சித்து இருந்தது.
சொத்துகளை சட்டவிரோத வகையில் பதுக்கி வைத்துள்ளார் என ஊழல் கண்காணிப்பு துறையால் குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதுதவிர, அவரது ஹரிபாதம் மற்றும் காயம்குளம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பிளாட்டுகளிலும் ஊழல் கண்காணிப்பு துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தி இருந்தனர்.