மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சமூக அமைப்புகள் போராட்டம்
சிவமொக்காவில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
சிவமொக்கா:-
மணிப்பூர் மாநில கலவரத்தில் இதுவரை 7 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் மத்திய, மாநில அரசுகள் இந்த கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பல இடங்களில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தநிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் பகுத்தறிவு பாசறை கர்நாடகா (வி.கே.கா.)என்ற சமூக அமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு கர்நாடக பெண்கள் அடக்குமுறை ஒழிப்பு அமைப்பை சேர்ந்தவர்களும் ஆதரவு அளித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மணிப்பூர் கலவரத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்திற்கு நியாயம் கிடைப்பதுடன், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க செய்யவேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பில் மாவட்ட கலெக்டரிடம், தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவை வாங்கிய கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.