நாடாளுமன்றத்தில் புகைகுண்டு வீச்சு: கைதான 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
புதுடெல்லி,
கடந்த 13-ந்தேதி நாடாளுமன்றத்தில் மக்களவைக்குள் 2 பேர் அத்துமீறி புகுந்து வண்ண புகை குண்டுகளை வீசினர். அதே நேரத்தில் நாடாளுமன்றத்தின் வெளியேயும் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் வண்ண புகை குண்டுகளை வீசியபடி கோஷங்கள் எழுப்பினர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் மக்களவைக்குள் அத்துமீறி புகுந்ததாக சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகியோர் மற்றும் அவர்களது கூட்டாளிகளான அமோல் தன்ராஜ் ஷிண்டே, நீலம்தேவி, லலித்ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்தனர். தற்போது 6 பேரும் வருகிற 5-ந்தேதிவரை போலீஸ் காவலில் உள்ளனர்.
இந்த நிலையில் 6 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் போலீசார் நேற்று மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஹர்தீப் கவுர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணையின்போது அரசு தரப்பு வக்கீல், நாடாளுமன்ற அத்துமீறல் திட்டமிடப்பட்ட தாக்குதல். இதன் பின்னணியின் உண்மையான நோக்கம், அவர்களுக்கு வேறு எதிரி நாட்டின் தொடர்பு, பயங்கரவாதிகள் தொடர்பு உள்ளதா என்பதை அறிய உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிலரின் வக்கீல் ஆஜராகாததால் வழக்கு விசாரணையை வருகிற 2-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.