நாடு முழுவதும் கவர்னர் மாளிகைகள் நோக்கி 26-ந் தேதி விவசாயிகள் பேரணி - விவசாய கூட்டமைப்பு


நாடு முழுவதும் கவர்னர் மாளிகைகள் நோக்கி 26-ந் தேதி விவசாயிகள் பேரணி - விவசாய கூட்டமைப்பு
x

மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் கவர்னர் மாளிகைகள் நோக்கி 26-ந் தேதி பேரணி நடத்தப்படும் என்று விவசாய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

போராட்டம் வாபஸ்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். டெல்லி எல்லைகளில் முகாமிட்டு ஓராண்டுக்கு மேல் போராடினர். 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோாச்சா என்ற விவசாய கூட்டமைப்பு, இதை ஒருங்கிணைத்து நடத்தியது.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதால், விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்தநிலையில், சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் தர்ஷன் பால் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

வெற்றி தினம்

கடந்த ஆண்டு நவம்பர் 19-ந் தேதி, வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. அதனால், வருகிற 19-ந் தேதி வெற்றி தினமாக கொண்டாடப்படும்.

விவசாயிகள் போராட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி வாபஸ் பெறப்பட்டபோது, மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு எழுத்துபூர்வமாக உறுதி அளித்தது. ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழுவை அமைக்கவில்லை. விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை பரிசீலிக்கக்கூட தயாராக இல்லை.

எம்.பி. அலுவலகங்கள்

இந்தநிலையில், வாக்குறுதியை மீறிய மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் 26-ந் தேதி கவர்னர் மாளிகைகளை நோக்கி பேரணி நடத்தப்படும். மேலும், டிசம்பர் 1 முதல் 11-ந் தேதிவரை அனைத்து அரசியல் கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் அலுவலகங்கள் நோக்கி பேரணி நடத்தப்படும். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 8-ந் தேதி கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story