திறமையான கைவினை கலைஞர்கள் சுய சார்பு இந்தியாவின் உண்மையான அடையாளங்கள்: பிரதமர் மோடி புகழாரம்


திறமையான கைவினை கலைஞர்கள் சுய சார்பு இந்தியாவின் உண்மையான அடையாளங்கள்:  பிரதமர் மோடி புகழாரம்
x

சுய சார்பு இந்தியாவின் உண்மையான மெய்ப்பொருளுக்கான அடையாளங்களாக திறமையான கைவினை கலைஞர்கள் திகழ்கிறார்கள் என பட்ஜெட்டுக்கு பின்னான கருத்தரங்கில் பிரதமர் மோடி புகழ்ந்து பேசியுள்ளார்.


புதுடெல்லி,


நாடாளுமன்றத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. கூட்டத்தொடரின் முதல் பகுதியில், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி, அவையின் மைய பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, முதல் பருவ கூட்டத்தொடர் வருகிற மார்ச் 13-ந்தேதிக்கு (நாளை மறுநாள்) ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

இதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் வலைதளம் வழியே நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுவார் என அரசு தெரிவித்தது. இதன்படி, நடப்பு 2023-24 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு பின்னான, வெபினார்கள் எனப்படும் வலைதளம் வழியேயான கருத்தரங்க நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதில், பசுமை எரிசக்தி வளர்ச்சி, இளைஞர் நலன், மருந்து துறைகளின் சிறப்பு உள்ளிட்ட பல விசயங்களை பற்றி அவர் பேசியுள்ளார். இந்த நிலையில், பட்ஜெட்டுக்கு பின்னான கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். மொத்தமுள்ள 12 கருத்தரங்கு நிகழ்ச்சிக்கான தொடரில் இறுதியான நிகழ்ச்சி இதுவாகும்.

இதில், பிரதம மந்திரி விஷ்வகர்மா கவுசல் சம்மான் என்ற பெயரிலான நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, கடந்த 3 ஆண்டுகளாக பட்ஜெட்டுக்கு பின்னான கருத்தரங்க நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவாதங்களில் ஆக்கப்பூர்வ முறையில் பலரும் பங்கு கொள்கின்றனர் என தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து அவர், பட்ஜெட் உருவாக்கம் பற்றி ஆலோசிப்பதற்கு பதிலாக, பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள விசயங்களை அமல்படுத்துவதற்கான சிறந்த, சாத்தியப்பட்ட வழிகளை பற்றி விவாதத்தில் பங்கேற்றவர்கள் பேசி வருகின்றனர் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இன்றைய கருத்தரங்கம் நாட்டின் கோடானு கோடி திறமையான மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது என கூறினார்.

திறமை இந்தியா திட்டம் மற்றும் கவுஷல் ரோஜ்கார் கேந்திரா திட்டங்களின் வழியே கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு திறமையை வளர்த்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை வழங்கப்படுதலை பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.

உள்ளூர் கைவினை பொருட்களை உற்பத்தி செய்வதில் சிறிய அளவிலான கைவினை கலைஞர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களை அதிகாரம் பெற செய்வதில் இந்த பிரதம மந்திரி விஷ்வர்மா யோஜனா கவனம் கொண்டுள்ளது.

இதுபோன்ற திறமை வாய்ந்த கைவினை கலைஞர்கள், பழமையான இந்தியாவில் ஏற்றுமதியை நோக்கிய தங்களது சொந்த வழியில் திறமையாக செயல்பட்டு வந்தனர். எனினும், அவர்களது திறமையான பணி நீண்டகாலம் அலட்சியப்படுத்தப்பட்டு வந்தது. அடிமை காலத்தில் அவர்களது பணி முக்கியத்துவமற்று இருந்தது.

சுதந்திர இந்தியாவிலும் கூட, அவர்களது சிறந்த வாழ்வுக்காக அரசிடம் இருந்து எந்தவித விசயங்களும் இல்லாத நிலையில், திறமையான மற்றும் கைவினைத்திறம் வாய்ந்த பல பாரம்பரிய வழிகளை அந்த குடும்பத்தினர் கைவிட்டு, விட்டு வாழ்க்கைக்காக வேறு வேலைகளை தேடி சென்று விட்டனர் என கூறியுள்ளார்.

திறமையான கைவினை கலைஞர்கள் சுய சார்பு இந்தியாவின் உண்மையான மெய்ப்பொருளுக்கான அடையாளங்கள் ஆவர். அதுபோன்ற நபர்களையே நமது அரசாங்கம் புதிய இந்தியாவை கட்டியெழுப்புபவர்கள் என எண்ணுகிறது என்று கூறியுள்ளார்.


Next Story