நோயாளிகளை கவனிப்பதில்லை.. இமாச்சல பிரதேசத்தில் 6 போதை மறுவாழ்வு மையங்கள் மூடப்பட்டன
போதை மறுவாழ்வு மையங்களில் இருந்த நோயாளிகளின் நிலை விலங்குகளை விட மோசமாக இருந்துள்ளது.
உனா:
போதைப்பொருள் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தி, போதைப்பழக்கத்தில் இருந்து மீட்பதற்காக இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏராளமான மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. உனா மாவட்டத்தில் மட்டும் 26 போதை மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், உனா மாவட்டத்தில் போதை மறுவாழ்வு மையங்கள் என்ற பெயரில் லாபநோக்குடன் கடைகளை நடத்திய மையங்களை மூடும்படி மாநில மனநல சுகாதார ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 6 போதை மறுவாழ்வு மையங்கள் மூடப்பட்டன.
உனா மாவட்டம் பஞ்சாலில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தின் நிர்வாகி 'சிட்டா' (ஹெராயினின் கலப்படி வடிவம்) எனப்படும் போதைப்பொருளை சப்ளை செய்தபோது சிக்கினார். இதைத் தொடர்ந்து, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் வர்மா தலைமையிலான குழுவினர் மாவட்டத்தின் அனைத்து போதை மறுவாழ்வு மையங்களிலும் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது, சில மையங்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதும், போதைக்கு அடிமையானவர்களின் நிலை விலங்குகளை விட மோசமாக இருந்ததும் தெரியவந்தது. சில மையங்களில் சிகிச்சை அளிப்பதற்கான டாக்டர்கள் இல்லை. மையங்களில் உள்ளவர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் செய்வதில்லை, முறையான மருத்துவ பதிவேடுகள் பராமரிப்பதில்லை என்பதும் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து விதிமுறைகளை மீறிய 6 மையங்களை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக டாக்டர் வர்மா தெரிவித்தார்.