வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கு: கேரள முதல்-மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரன் குற்றவாளியாக சேர்ப்பு
கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கில் கேரள முதல்-மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் 2020-ம் ஆண்டு நடந்த தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான சுவப்னா சுரேஷ், சரித் உள்பட 20-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து என்.ஐ.ஏ., அமலாக்க துறை, மத்திய சுங்கத்துறை ஆகிய முப்பெரும் விசாரணை அமைப்புகள், தங்கம் கடத்தல் மற்றும் வெளிநாட்டிற்கு அமீரக தூதரகம் உதவியுடன் டாலர் நோட்டுகள் கடத்திய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதில் டாலர் நோட்டுகள் வெளிநாட்டுக்கு கடத்திய வழக்கில் முதல்-மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் பணியில் இருந்து 2020-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் அரசு பணியில் சேர்ந்தார். இந்த நிலையில், டாலர் கடத்தல் வழக்கு எர்ணாகுளம் பொருளாதார குற்றவியல் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனை 6-வது குற்றவாளியாக சேர்த்து மத்திய சுங்க துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிகாரி காலித் முகம்மது அல் சவுக்கிரி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கோர்ட்டில் தாக்கல் செய்த அந்த குற்றப்பத்திரிக்கையில், டாலர் கடத்தப்பட்ட சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்தவர் சிவசங்கரன் என்றும், விசாரணையின்போது சுவப்னா சுரேஷின் வங்கி லாக்கரில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி பணம் சிவசங்கரன் லைப்மிஷன் திட்டத்திற்காக லஞ்சமாக பெறப்பட்டது எனவும், சிவசங்கரன் போலீசாரின் புலனாய்வு ரகசியங்களை சுவப்னாவுக்கு கைமாற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.