கல்லூரி மாணவி ஆபாச வீடியோ விவகாரத்தில் எஸ்.ஐ.டி. விசாரணை தேவையில்லை; முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தணிக்கை நடப்பதால் கல்லூரி மாணவி ஆபாச வீடியோ விவகாரத்தில் எஸ்.ஐ.டி. விசாரணை தேவையில்லை என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மங்களூரு:
கர்நாடகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. இந்த கனமழையால் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா உள்ளிட்ட பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மங்களூருவுக்கு வந்தார்.
மங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, கலெக்டர் முல்லை முகிலன், நகர போலீஸ் கமிஷனர் குல்தீப்குமார் ஜெயின் ஆகியோர் வரவேற்றனர். அவருடன் தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு மந்திரி தினேஷ் குண்டுராவும் வந்தார். இதையடுத்து விமான நிலையத்தில் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உடுப்பியில் உள்ள தனியார் கல்லூரியில் கழிவறையில் சக மாணவியை 3 மாணவிகள் வீடியோ எடுத்த விவகாரத்தில் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. துணை சூப்பிரண்டு தலைமையில் விசாரணை நடப்பதால், இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழுவின் (எஸ்.ஐ.டி.) விசாரணை தேவையில்லை.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, உடுப்பி கல்லூரியில் ஆய்வு செய்து, அங்கு கழிவறையில் ரகசிய கேமரா எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை அறிக்கை வந்ததும் இதுபற்றி விரிவாக விவாதிக்கலாம். விசாரணை முடிந்த பிறகே இதுபற்றி கருத்து தெரிவிப்பேன்.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் கலாசார காவலர்கள் என்ற பெயரில் சிலர் சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். சட்டத்தை கையில் எடுத்து அடிதடி சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் அனுமதி இல்லை. இந்த கலாசார காவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்கக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற சம்பவங்களில் போலீசார் மெத்தனம் காட்டக்கூடாது. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சவுஜன்யா வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு நகலை நான் இன்னும் பார்க்கவில்லை. இதுதொடர்பாக மறு விசாரணை நடத்த வேண்டும் என்று சவுஜன்யாவின் பெற்றோர் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டப்படி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வக்கீல் என்ற முறையில், ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கூறுவேன்.
பிட்காயின் முறைகேடு குறித்து எஸ்.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக விசாரணை குழுவுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா உடுப்பியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அரபிக்கடலோர பகுதிகளில் மண்அரிப்பு ஏற்பட்ட பகுதிகளையும் சித்தராமையா பார்வையிட்டார். அப்போது மழை ெவள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் சித்தராமையா விவரங்களை கேட்டறிந்து கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட பொறுப்பு மந்திரி லட்சுமி ஹெப்பால்கரும் உடன் இருந்தார்.
இதையடுத்து மழை ெவள்ள பாதிப்புகள் குறித்து உடுப்பி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
அரசு அதிகாரிகள் மக்கள் பணியை அரசியலாக்கக்கூடாது. மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் பணியில் அலட்சியமாக இல்லாமல் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டால் பொறுத்து கொள்ள முடியாது. அதிகாரிகள் சம்பளம் மற்றும் சலுகைகளை மக்களின் வரிப்பணத்தில் இருந்து பெறுகிறார்கள். மாவட்ட அளவிலான அதிகாரிகள், அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்ற கூடாது. அடிக்கடி தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும்.
உடுப்பி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை சேதங்களை அதிகாரிகள் முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மாற்று பயிரை சாகுபடி செய்ய தேவையான உரம் மற்றும் விதை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சித்தராமையா முன்பு சண்டையிட்ட மகளிர் காங்கிரசார்
சித்தராமையா 2-வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கடலோர மாவட்டத்துக்கு சென்றுள்ளார். அவருக்கு மங்களூரு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சித்தராமையாவை வரவேற்க மகளிர் காங்கிரசார் விமான நிலையத்தில் குவிந்தனர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மகிளா காங்கிரஸ் தலைவர் ஷேலட் பின்டோ சித்தராமையாவுக்கு பூங்கொத்து கொடுத்தார். அப்போது முன்னாள் மேயர் கவிதா சனில், சித்தராமையாவை வரவேற்க வந்தார். அந்த சமயத்தில் ஷேலட் பின்டோ, கவிதாவை தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவரும் முதல்-மந்திரி சித்தராமையா முன்பு சண்டையிட்டு கொண்டனர். இதன்காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.