சிசோடியா மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு; டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய ஆம் ஆத்மி முடிவு


சிசோடியா மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு; டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய ஆம் ஆத்மி முடிவு
x
தினத்தந்தி 28 Feb 2023 12:28 PM GMT (Updated: 28 Feb 2023 1:05 PM GMT)

டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியா கைதுக்கு எதிரான மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்த நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய ஆம் ஆத்மி முடிவு செய்து உள்ளது.

புதுடெல்லி,



டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் மாநில துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் சிசோடியா ஆஜரானார்.

அவரிடம் 8 மணி நேரத்திற்கு மேல் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் சிசோடியாவை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிசோடியாவை வரும் 4-ந்தேதி வரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால், சிசோடியா தற்போது சி.பி.ஐ. காவலில் உள்ளார்.

இந்நிலையில், சி.பி.ஐ. கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணீஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இன்று மாலை விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது.

எனினும், சி.பி.ஐ. கைது நடவடிக்கைக்கு எதிரான சிசோடியாவின் மனுவை விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் பி.எஸ். நரசிம்மா தலைமையிலான அமர்வு இன்று மறுப்பு தெரிவித்து விட்டது.

இந்த சூழலில் சட்ட பிரிவு 32-ன் கீழ் மனுவை நாங்கள் விசாரிக்க முடியாது என அமர்வு தெரிவித்ததும், சிசோடியாவின் வழக்கறிஞர் சிங்வி மனுவை வாபஸ் பெற்று கொண்டார்.

டெல்லியில் சம்பவம் நடந்திருக்கும்போது, சிசோடியா நேரடியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு வர முடியாது என்றும், அவருக்கான தீர்வுகள், விசாரணை நீதிமன்றம் மற்றும் டெல்லி ஐகோர்ட்டிலேயே உள்ளன என்றும் அமர்வு தெரிவித்து உள்ளது. அதனால், மாற்று தீர்வை காணும்படியும் கேட்டு கொண்டது.

டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியா கைதுக்கு எதிரான மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்த நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய ஆம் ஆத்மி முடிவு செய்து உள்ளது.

இதனால், சிசோடியா இல்லாத சூழலில், டெல்லி போக்குவரத்து மற்றும் வருவாய் துறை மந்திரி கைலாஷ் கெஹ்லாட் வருடாந்திர மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்ய கூடும் என கூறப்படுகிறது.

டெல்லியில் 2021-22-ம் ஆண்டுக்கான மதுபான கொள்கை 2021-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகள் பற்றிய ரகசிய தகவல்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டு, அதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள், விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்தனர் எனவும், இதற்கு பிரதிபலனாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இந்த ஊழலில், சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஊழலில், மதுபான கொள்கையை வகுத்த கலால் துறைக்கு பொறுப்பேற்றவர் என்ற வகையில், டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் பெயர் அடிபட்டு வந்தது. அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் சோதனை நடத்தியது. தொடர்ந்து அக்டோபர் மாதம் 17-ந்தேதி அவரிடம் சி.பி.ஐ. விசாரணையும் நடத்தியது.

கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி அவரது அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில், சிசோடியாவிடம் 8 மணிநேர விசாரணைக்கு பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கடந்த ஞாயிற்று கிழமை கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.


Next Story