பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய கடைசி நபர் மேற்கு வங்கம் - நேபாளம் எல்லையில் கைது!


பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய கடைசி நபர் மேற்கு வங்கம் - நேபாளம் எல்லையில் கைது!
x

பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய கடைசி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சண்டிகர்,

பஞ்சாபி பாடகரும், காங்., பிரமுகருமான சித்து மூஸ்வாலா, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த மே 29 ஆம் தேதி மூஸ்வாலா தனது காரில் சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பஞ்சாபில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி லாரன்ஸ் பிஸ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.டெல்லி திஹார் சிறையில் உள்ள நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர், இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசார் லாரன்சை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

முன்னதாக அமிர்தசரஸ் அருகே நடந்த என்கவுன்டரில் பஞ்சாப் காவல்துறை, இருவரை சுட்டுக் கொன்றனர். கொலையில் தொடர்புடைய மூன்று பேரை டெல்லி காவல்துறை கைது செய்தது.

இதனையடுத்து நாட்டுப்புற பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய கடைசி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை பஞ்சாப் காவல்துறை டுவீட் செய்துள்ளது.

பஞ்சாப் காவல்துறை டிஜிபியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், "பஞ்சாப் காவல்துறை, மத்திய அமைப்புகள் மற்றும் டெல்லி காவல்துறையுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், சித்து முசேவாலா கொலை வழக்கில் தலைமறைவான துப்பாக்கிச் சூடு நடத்திய தீபக் முண்டி மற்றும் இரண்டு கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார்.

தீபக், கபில் பண்டிட் மற்றும் ராஜீந்தர் ஆகியோர் மேற்கு வங்கம்-நேபாளம் எல்லையில் உளவுத்துறை நடவடிக்கையில் ஏஜிடிஎப் குழுவினரால் இன்று கைது செய்யப்பட்டனர்.

பொலிரோ மாட்யூலில் துப்பாக்கி சுடும் வீரராக தீபக் இருந்தார். அதே நேரத்தில், கபில் பண்டிட் மற்றும் ராஜீந்தர் அதற்கு ஆயுதங்கள் மற்றும் மறைவிடம் உள்ளிட்ட தளவாடங்களை வழங்கினர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story