இந்துக்களை தூற்றுவதே சித்தராமையாவின் மதச்சார்பின்மை கொள்கை: பா.ஜனதா விமர்சனம்
இந்துக்களை தூற்றுவதே சித்தராமையாவின் மதச்சார்பின்மை கொள்கை என்று பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது.
பெங்களூரு:
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கலந்துகொண்ட எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அரசியல் சாசன புத்தகம் வழங்கினார். அதில் சமதர்மம், மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு இருப்பதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை எம்.பி.க்களுக்கு வழங்கக்கூடாது என்று சட்டம் உள்ளதா?. அம்பேத்கரின் அடிப்படை அரசியல் சாசனத்தின் மீது சித்தராமையாவுக்கு ஏன் இவ்வளவு கோபம்?. அம்பேத்கரின் அரசியல் சாசனத்தில் சமதர்மம், மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகள் இல்லை.
நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தி அரசியல் சாசனத்தையே முடக்கியவர் இந்திரா காந்தி. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் சாசனத்தில் வலுக்கட்டாயமாக சமதர்மம், மதச்சார்பின்மை வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. சித்தராமையா அடிக்கடி பயன்படுத்தும் சமதர்மம், மதச்சார்பின்மை வார்த்தைகள் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் இல்லை. இந்துக்களை தூற்றுவதே சித்தராமையாவின் மதச்சார்பின்மை கொள்கை ஆகும். முஸ்லிம் லீக் போன்ற மதவாத கட்சியுடன் சேர்ந்து காங்கிரஸ் பல ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தது. எந்த ரீதியில் காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சி என்று சித்தராமையா சொல்கிறார்.
இவ்வாறு பா.ஜனதா தெரிவித்துள்ளது.