நாட்டில் ஜனநாயகம் உறுதியாக இருக்க காரணம் 'நேரு'; முதல்-மந்திரி சித்தராமையா புகழஞ்சலி


நாட்டில் ஜனநாயகம் உறுதியாக இருக்க காரணம் நேரு; முதல்-மந்திரி சித்தராமையா புகழஞ்சலி
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் ஜனநாயகம் உறுதியாக இருக்க நேரு தான் காரணம் என்று முதல்-மந்திரி சித்தராமையா புகழஞ்சலி செலுத்தினார்.

பெங்களூரு:

நாட்டில் ஜனநாயகம் உறுதியாக இருக்க நேரு தான் காரணம் என்று முதல்-மந்திரி சித்தராமையா புகழஞ்சலி செலுத்தினார்.

நேரு காரணம்

ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-மந்திரி சித்தராமையா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த நேருவின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் பிரதமர் பதவியை நேரு வகித்தார். அவர் தொடர்ந்து 17 ஆண்டுகள் பிரதமர் பதவியில் நீடித்தார். அதனால் தான் அவரை நவீன இந்தியாவின் பிரதமர் என்று அழைக்கிறோம். ஆங்கிலேயர்கள் நமது நாட்டை கொள்ளையடித்து சென்றனர். அதன் பிறகு அவர் நாட்டை வளர்ச்சி அடைய செய்தார். இன்று நமது நாட்டில் ஜனநாயகம், ஒருமைப்பாடு உறுதியாக இருக்கிறது என்றால் அதற்கு நேரு காரணம்.

வளர்ச்சிக்கு அடித்தளம்

ஐந்தாண்டு திட்டங்களை கொண்டு வந்து நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய பாடுபட்டார். அவர் நமக்கு அமைத்து கொடுத்த அடித்தளத்தின் மீது இன்று நாம் வளர்ச்சி பணிகளை மேற்கொள்கிறோம். ஜனநாயகம், நவீனம், வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் நேரு. சுதந்திர போராட்டத்தில் நேதாஜி, வல்லபாய் பட்டேல், நேரு, சந்திரசேகர் ஆசாத், லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் மகாத்மா காந்தியுடன் சேர்ந்து செயல்பட்டனர்.

நேரு 9 ஆண்டுகள் சிறையில் காலத்தை கழித்தார். நாட்டின் சுதந்திரம், வளர்ச்சிக்காக அதிக தியாகங்களை செய்தது நேரு குடும்பம். நேருவை இன்று விமர்சிக்கிறார்கள். ஆனால் அவரின் தியாகத்தை நாம் நினைவு கூர வேண்டும். அவர் நமக்கு உந்துசக்தி.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story