சித்தராமையா தலைமையில் புதிய அரசு: சனிக்கிழமை பதவியேற்பு விழா - ஏற்பாடுகள் தீவிரம்
சனிக்கிழமை நடைபெற உள்ள பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. அதாவது 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் கர்நாடக மாநில முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. கர்நாடக மாநில துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். இதனால் சித்தராமையா ஆதரவாளர்கள் கர்நாடக மாநிலத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு மித்த கருத்து அடிப்படையில் இருவரும் தேர்வாகி உள்ளனர். தகுதிவாய்ந்த பல தலைவர்கள் உள்ளதால் முதல்-மந்திரி யார் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. வரும் சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா பெங்களூருவில் நடைபெறும்" என்று அவர் தெரிவித்தார்.
இதன்படி பெங்களூரில் உள்ள காண்டீரவா மைதானத்தில் முதல்-மந்திரி பதவியேற்பு விழா நாளை மறுநாள் நடைபெறுவதையொட்டி, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.