17 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதற்கு சித்தராமையா காரணம்
காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) ஆட்சியில் 17 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதற்கு சித்தராமையா காரணம் என்று முன்னாள் மந்திரிகள் சுதாகர், சோமசேகர் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு:-
கூட்டணி ஆட்சி
கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி வகித்தார். கூட்டணி கட்சி மீதான அதிருப்தியால் 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது.
இந்த நிலையில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தான் காரணம் என்று காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவரும், முன்னாள் மந்திரியுமான சுதாகர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
அநீதிகளை கூறினோம்
கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு 17 எம்.எல்.ஏ.க்கள் ஆபரேஷன் தாமரை மூலம் நாங்கள் பா.ஜனதாவுக்கு சென்றோம். இந்த 17 பேர்களில் 8 பேர் இந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். கட்சி மாறி வந்தவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளதாக சிலர் சொல்கிறார்கள்.
அன்று எங்களை நம்பி இருந்த தொண்டர்கள், நிர்வாகிகளை நம்பி இருந்தவர்களை காப்பாற்ற பெரிய அளவில் சிக்கலை எதிர்கொண்டு நாங்கள் கட்சி மாறினோம். பதவியை ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரிகள் ஆனோம். நாங்கள் கட்சி மாறியதற்கு சித்தராமையா முக்கிய காரணம். காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) ஆட்சி ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்த சித்தராமையாவிடம் நாங்கள் எங்களுக்கு ஏற்படும் அநீதிகளை எடுத்து கூறினோம்.
பொறுத்து கொள்ளுங்கள்
அதற்கு அவர், இந்த ஆட்சியில் எனது பேச்சுக்கு மதிப்பு இல்லை என்று கூறினார். 2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் வரை பொறுத்து கொள்ளுங்கள், அதன் பிறகு இந்த ஆட்சி ஒரு நாள் கூட நீடிக்காது என்றும் கூறி அவர் எங்களை சமாதானப்படுத்தினார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோமசேகரும் குற்றச்சாட்டு
இதுபோல் முன்னாள் மந்திரியான எஸ்.டி.சோமசேகரும் சித்தராமையா மீது குற்றம்சாட்டு கூறியுள்ளார். அவர் கூறுகையில், காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியின் போது எம்.எல்.ஏ.க்கள் நிதி ஒதுக்கீடு, வளர்ச்சிப் பணிகள் ஒதுக்கீடு உள்பட பல்வேறு விவகாரத்தில் அதிருப்தியில் இருந்தனர்.
அவர்கள், ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்த சித்தராமையாவிடம் இதுபற்றி கூறினர். அப்போது எல்லாம் கூட்டணி ஆட்சி மீதான தனது ஆதரவற்ற நிலையை வெளிப்படுத்தியது. இதனால் தான் எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு வெளியேறி, பா.ஜனதாவில் சேர்ந்தனர். இதற்கு சித்தராமையா தான் காரணம் என்றார்.
கர்நாடக முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் பிடிவாதமாக இருந்து வரும் நிலையில், முன்னாள் மந்திரிகள் சித்தராமையாவுக்கு எதிராக குற்றச்சாட்டு கூறியிருப்பது காங்கிரசில் மேலும் புயலை கிளப்பி வருகிறது.