எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்
தலைமை நீதிபதி அமர்வு விலகியதால், எஸ்.ஐ.தேர்வு முறைகேடு வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.
பெங்களூரு:
தலைமை நீதிபதி அமர்வு விலகியதால், எஸ்.ஐ.தேர்வு முறைகேடு வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.
தேர்வு முறைகேடு
கர்நாடகத்தில் காலியாக இருந்த 545 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்(எஸ்.ஐ.) பதவிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் போலீஸ் உயர் அதிகாரி உள்பட 80-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்க் கார்கே, இவ்வழக்கு தொடர்பான விசாரணையை கண்காணிக்கவும், அதுபற்றிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அமர்வு வாபஸ்
அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி, எஸ்.ஐ. தேர்வு முறைகேடு குறித்த விசாரணையை கோர்ட்டு கண்காணிப்பில் நடத்த உத்தரவிட்டனர். மேலும், தற்போது வழக்கை விசாரித்து வரும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலே, நீதிபதி அசோக் எஸ்.கினகிரே ஆகியோர் அடங்கிய 2 பேர் கொண்ட அமர்வு வாபஸ் பெற்றது. மேலும் வழக்கு விசாரணையை மற்றொரு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டப்பட்டுள்ளது.
மறுதேர்வு...
இதற்கிடையே 545 போலீஸ் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மறுதேர்வு நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. வழக்கில் இறுதி தீர்ப்பு வந்த பிறகு, மறுதேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். கோர்ட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறோம். வழக்கு முடியும் வரை தேர்வு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.