ஷரத்தா கொலை வழக்கு: காவல்துறை தரப்பில் வெளியான புதிய தகவல்
மெஹ்ராலி மற்றும் குருகிராம் காடுகளில் கண்டெடுக்கப்பட்ட சில எலும்பு மாதிரிகள் ஷரத்தா தந்தையின் டி.என்.ஏ. உடன் ஒத்துப்போனதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா தனது காதலன் அப்தாப் அமீன் என்பவரால் கொடூரமாக முறையில் கொலை செய்யப்பட்டார். அப்தாப் அமீன், ஷரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்தாப் அமீன், ஷரத்தாவின் உடலை வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின்னர் கொஞ்சமாக, கொஞ்சமாக உடல் பகுதியை அகற்றினார்.
இந்த நிலையில், ஷரத்தாவை காணவில்லை என அவரது தந்தை புகார் அளித்தது தொடர்பாக வசாய் மாணிக்பூர் போலீசார், டெல்லி மெக்ராலி போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடத்தல் வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், கடந்த மாதம் 10-ந் தேதி முக்கிய குற்றவாளியாக சந்தேகப்படும் அப்தாப் அமீனை அவரது வீட்டில் பிடித்தனர்.
தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அப்தாப்பிடம் உண்மை கண்டறியும் 'பாலிகிராப்' சோதனை மற்றும் நார்கோ சோதனை நடத்தப்பட்டது. இதில் ஷரத்தாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி, டெல்லி புறநகர் பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். காடுகளில் வீசப்பட்ட ஷரத்தா உடலின் பாகங்கள் டெல்லியில் வீசப்பட்டதா அல்லது பிற மாநிலங்களிலும் வீசப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஷரத்தா கொலை வழக்கில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மெஹ்ராலி மற்றும் குருகிராம் காடுகளில் கண்டெடுக்கப்பட்ட சில எலும்பு மாதிரிகள் ஷரத்தா தந்தையின் டி.என்.ஏ. உடன் ஒத்துப்போனதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த எலும்பு மாதிரிகள் கொலை செய்யப்பட்ட ஷரத்தாவினுடையது என உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.