டெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கு: கொலையாளி அப்தாப்பிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை


டெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கு: கொலையாளி அப்தாப்பிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை
x

டெல்லியில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டது தொடர்பாக கொலையாளியான அவரது காதலனிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனையை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர்.

புதுடெல்லி,


மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தா, அவரது காதலனான அப்தாப் பூனாவாலாவால் டெல்லியில் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை அப்தாப் துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசியெறிந்தார். கடந்த மே மாதம் நடந்த இந்த கொலை சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அப்தாப் பொய் சொல்கிறாரா என்பதை கண்டறியும் 'பாலிகிராப்' சோதனை நேற்று முன்தினம் அவருக்கு நடத்தப்பட்டது. விசாரணைக்கு உள்ளாகும் நபரின் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, சுவாச வேகம் ஆகியவற்றை அளவிட்டு, அதன் அடிப்படையில், அவர் பொய் சொல்கிறாரா என்று கண்டுபிடிக்க முயல்வது இந்த சோதனை.

இந்த சோதனையைத் தொடர்ந்து, அப்தாப்பிடம் உண்மை கண்டறியும் சோதனையை இன்று (வியாழக்கிழமை) நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரிக்கப்படுபவருக்கு வேதிமருந்தைச் செலுத்தி, அவர் தன்வசமில்லாத நிலையில் அவரிடம் இருந்து உண்மைகளை கறக்கும் முறையாகும் இது.

ஆனால் இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு முன்பாக, அப்தாப் உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் சரியாக உள்ளாரா என்பதை அறியும் பல்வேறு சோதனைகள் நடத்தப்படும். அதில் அவர் இயல்பாக உள்ளது தெரியவந்தால்தான் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும் என டெல்லி போலீசார் கூறினர்.

இதற்கிடையில் டெல்லி கோர்ட்டில் நேற்று முன்தினம் நடந்த விசாரணையில், தான் ஷ்ரத்தாவை திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை என்றும், உணர்ச்சிவேகத்தில் அந்த சம்பவம் நடந்துவிட்டதாகவும் அப்தாப் கூறியுள்ளார்.

பரிதாபமாக பலியாகிவிட்ட ஷ்ரத்தா, தன்னை அப்தாப் கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி வீசியெறிந்துவிடுவார் என்று ஏற்கனவே மராட்டிய போலீசில் புகார் செய்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி ஷ்ரத்தா போலீசுக்கு எழுதிய அந்த புகார் கடிதத்தில், அப்தாப் தன்னை தொடர்ந்து அடித்து சித்ரவதை செய்து வருவதாகவும், அது அப்தாப்பின் பெற்றோருக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

குரூர காதலன் அப்தாப் தொடர்ந்து தாக்கி துன்புறுத்திவந்தபோதிலும், கொலை செய்துவிடுவார் என்ற அச்சம் இருந்தபோதிலும் ஏன் ஷ்ரத்தா அவரை விட்டு பிரியவில்லை என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.


Next Story