மேற்கு வங்காளத்தில் பயங்கரம் முன்னாள் கடற்படை வீரரை கொன்று உடலை 6 துண்டுகளாக்கி வீச்சு மனைவி, மகன் கைது
மேற்கு வங்காளத்தில் முன்னாள் கடற்படை வீரரை மகனே கொலை செய்து, உடலை 6 துண்டுகளாக்கி வீசிய கொடூரம் அரங்கேறி உள்ளது.
கொல்கத்தா:
டெல்லியில் காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண் கடந்த மே மாதம் அந்த வாலிபரால் கொலை செய்யப்பட்டார். பின்னர் ஷ்ரத்தாவின் உடலை அந்த வாலிபர் 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசினார்.
நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேற்கு வங்காளத்தில் அதைப்போன்ற கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.
அங்குள்ள தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் பரைப்பூரை சேர்ந்தவர் உஜ்வால் சக்கரவர்த்தி (வயது 55). முன்னாள் கடற்படை வீரரான இவருக்கு மனைவியும், மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் உஜ்வால் சக்கரவர்த்தி மாயமானதாக அவரது மனைவியும், மகனும் கடந்த 15-ந் தேதி பரைப்பூர் போலீசில் புகார் செய்தனர். அவர்களிடம் போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டபோது இருவரும் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறினர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது தந்தையை கொலை செய்ததை அவரது மகன் ஒப்புக்கொண்டார்.
உஜ்வால் சக்கரவர்த்தி தனது மனைவி மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மகனை தினமும் சித்ரவதை செய்து வந்துள்ளார். தனது தேர்வுக்காக ரூ.3 ஆயிரம் தருமாறு கடந்த 12-ந் தேதி உஜ்வால் சக்கரவர்த்தியிடம் மகன் கேட்டுள்ளார்.
இதில் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே தந்தையை அவரது மகன் திடீரென பிடித்து தள்ளிவிட்டார். இதில் நாற்காலி ஒன்றில் மோதி கீழே விழுந்த உஜ்வால் சக்கரவர்த்தி மயக்கம் அடைந்தார்.
ஆனாலும் ஆத்திரம் தீராத மகன் பின்னர் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார். பின்னர் தாயும், மகனுமாக சேர்ந்து உஜ்வால் சக்கரவர்த்தியின் உடலை கழிவறைக்கு எடுத்து சென்று 6 துண்டுகளாக கூறுபோட்டனர்.
பின்னர் உஜ்வாலின் மகன், தந்தையின் உடல் பாகங்களை வீட்டின் அருகே உள்ள குளம், குப்பை கிடங்கு என ஆங்காங்கே வீசி விட்டு வந்துள்ளார்.
இந்த தகவல்களை போலீஸ் விசாரணையில் தாயும், மகனும் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்த போலீசார், தாய்-மகனை நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் உஜ்வால் சக்கரவர்த்தியின் உடல் பாகங்களை மீட்பதற்காக அவர்களை அழைத்து சென்றனர்.
நீண்ட தேடுதல் வேட்டையில் உஜ்வால் சக்கரவர்த்தியின் 2 கால்கள், தலை, வயிற்றுப்பகுதி ஆகியவை மீட்கப்பட்டன. கைகள் மற்றும் பிற உடல் பாகங்கள் இன்னும் கிடைக்காததால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
முன்னாள் கடற்படை வீரரை மனைவியும், மகனும் இணைந்து கொலை செய்து, உடலை துண்டு துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.