சுருக்குமடி வலை விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு


சுருக்குமடி வலை விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
x

கோப்புப்படம்

சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

புதுடெல்லி,

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை கோரிய மனுக்களை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.போபன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், ஏ.சிராஜுன், மீன்பிடிக்காலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி விட்டதால் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க இடைக்காலமாக அனுமதிக்க வேண்டும் என வாதிட்டனர்.

இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆட்சேபம் தெரிவித்து மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, சஞ்சய் ஹெக்டே வாதிடுகையில், சுருக்குமடி வலை என்பது ஒரு ஹெக்டேர் அளவு கொண்டது. 3 கால்பந்தாட்ட மைதானத்துக்கு சமமானது. இதை அனுமதித்தால் அபூர்வ வகை கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். சுருக்குமடி வலையை அனுமதிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே இரண்டு தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. சுருக்குமடி வலையை அனுமதித்தால் ஏனைய மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதி இடம்பெற்றிருந்தும், கருத்தை கேட்காமலும், ஒப்புதல் இல்லாமலும் நிபுணர் குழு அதன் அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்பித்துள்ளது என வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் கடந்த 18-ந் தேதி தள்ளிவைத்தது. இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்குகிறது.


Next Story