உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்: அமர்ந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஜிம் பயிற்சியாளர்


உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்:  அமர்ந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஜிம் பயிற்சியாளர்
x

உத்தர பிரதேசத்தில் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு உள்ளது.



காசியாபாத்,


உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் ஷாலிமார் கார்டன் பகுதியில் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) ஒன்று உள்ளது. இதன் உரிமையாளராக அடில் (வயது 33) என்பவர் இருந்து வருகிறார். இவர் வாடிக்கையாளர்களுக்கு உடற்பயிற்சி முறைகளை கற்று தரும் ஜிம் பயிற்றுனராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனினும், ஜிம்முக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளார். அவரும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொள்வது வழக்கம்.

சமீபத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கி, அதற்கான அலுவலகம் ஒன்றையும் ஷாலிமார் கார்டன் பகுதியில் திறந்துள்ளார். அந்த அலுவலகத்தில், கடந்த ஞாயிற்று கிழமை இரவு 7 மணியளவில், தனது இருக்கைக்கு வந்த அவர், மேலே அணிந்த பனியனை கழற்றி போட்டு விட்டு, நாற்காலியில் அமர்ந்து உள்ளார்.

சிறிது நேரத்தில் சோர்வாக காணப்பட்ட அவருக்கு மற்றொரு நபர் வியர்வையை துடைத்து விட்டு இருக்கிறார். இதன்பின்பு, சற்று நேரம் நாற்காலியில் அமர்ந்திருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அப்படியே சரிந்து உள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த உடனிருந்தவர்கள் அவரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

மும்பையில் சில வாரங்களுக்கு முன் 35 வயது நபர் நவராத்திரி பண்டிகையையொட்டி, கர்பா நடனம் ஆடியபோது, மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். கடந்த மாதம் ஜம்முவில், கடவுள் பார்வதி வேடமிட்டு யோகேஷ் குப்தா என்ற கலைஞர் மேடையில் நடனத்தின் ஒரு பகுதியாக, தரையில் விழுந்த அவர், பின்பு தொடர்ந்து எழுந்து ஆடியுள்ளார்.

இந்நிலையில், நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்தபோதே சரிந்து விழுந்துள்ளார். ஆனால், சரிந்து விழுந்து பல நிமிடங்கள் அவர் எழுந்திருக்கவில்லை. இசை ஒலித்து கொண்டிருந்தது. பார்வையாளர்கள் நிகழ்ச்சியின் ஒரு பகுதி என்று அமைதியாக பார்த்து கொண்டு இருந்துள்ளனர்.

ஆனால், கடவுள் சிவன் வேடமிட்ட மற்றொரு கலைஞர் மேடைக்கு சென்று யோகேஷை பரிசோதித்து உள்ளார். அதன்பின்னர், நிலைமையறிந்து பதறி போய் உதவிக்கு ஆட்களை அழைத்து உள்ளார். சமீபத்தில் மற்றொரு சம்பவத்தில் கர்பா நடனம் ஆடிய நபர் சரிந்து, விழுந்து மயங்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்து உள்ளார். இதனை கேட்ட அதிர்ச்சியில் அவரது தந்தையும் மரணம் அடைந்த சம்பவம் நடந்தது.


Next Story