சிவசேனா கட்சி சின்னம் முடக்கம்: நாங்கள் போராடி வெற்றி பெறுவோம் - ஆதித்ய தாக்கரே
சிவசேனா கட்சி சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அதிரடி முடிவு எடுத்துள்ளது.
மும்பை,
மராட்டியம் மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதி இடைதேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும் சிவசேனா கட்சியின் பெயரையோ அல்லது வில்- அம்பு சின்னத்தையோ பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே தரப்பினர் சிவசேனா பெயர், வில், அம்பு சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிவசேனா கட்சி சின்னம், பெயர் முடக்கியது குறித்து முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்த அவர் தனது டுவிட்டர் பதிவில், "பணத்திற்கு விலைபோன துரோகிகள் சிவசனோ பெயரையும், சின்னத்தையும் முடக்கும் வெட்கக்கேடான மற்றும் கீழ்த்தரமான செயலை செய்துள்ளனர். இதை மராட்டிய மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் போராடி வெற்றி பெறுவோம். உண்மையின் பக்கம் நாங்கள் இருக்கிறோம். சத்யமேவ ஜெயதே" என கூறியுள்ளார்.