சிவசேனா கட்சி சின்னம் முடக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி
அந்தேரி கிழக்கு தொகுதி இடைதேர்தலையொட்டி சிவசேனா கட்சி சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு எடுத்துள்ளது.
மராட்டியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது.
ஆனால் முதல்-மந்திரி பதவி போட்டி காரணமாக தேர்தலுக்கு பிறகு கூட்டணி முறிந்தது. மேலும் கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சிவசேனா ஆட்சியை பிடித்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார். கடந்த ஜூன் மாதம் நடந்த அரசியல் சூறாவளியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கினார்.
சிவசேனாவின் மொத்தம் உள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் 40 பேருடன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்-மந்திரி ஆனார் ஏக்நாத் ஷிண்டே. இதுதவிர சிவசேனாவின் 18 எம்.பி.க்களில் 12 பேர் ஷிண்டே அணிக்கு தாவினர். இதனால் சிவசேனா 2 அணியாக உடைந்தது.
இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனாவை உரிமை கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அளித்தது. அதில், நாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும், எங்களுக்கு தான் கட்சியின் வில் அம்பு சின்னத்தை தர வேண்டும் என்றும் கோரியது.
ஆனால் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை, வில் அம்பு சின்னம் தொடர்பான ஏக்நாத் ஷிண்டே தரப்பின் கடிதத்தை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க தடை விதிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர்.
இது தொடர்பான மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, உத்தவ் தாக்கரே தரப்பினரின் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் சிவசேனா கட்சி சின்னத்தை உரிமை கோரி ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்த கடிதத்தை பரிசீலித்து முடிவு எடுக்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன்படி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இந்தநிலையில் கடந்த மே மாதம் உயிரிழந்த சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் அந்தேரி கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி சார்பில் ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல பா.ஜனதா, முன்னாள் கவுன்சிலர் முர்ஜி பட்டேலை வேட்பாளராக களம் இறக்கி உள்ளது. இந்த தேர்தலில் உத்தவ், ஷிண்டே அணி இடையே நேரடி போட்டி இல்லாத போதும், தேர்தலில் உத்தவ் தாக்கரே வேட்பாளர் வெற்றி பெற்றால் அது ஷிண்டே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.
இந்தநிலையில் ஷிண்டே தரப்பில் கடந்த 4-ந்தேதி தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அதில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வில்-அம்பு சின்னத்தை உத்தவ் தாக்கரே அணிக்கு ஒதுக்க கூடாது என கோரிக்கை வைத்தனர்.
இந்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட உத்தரவில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைதேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும் கட்சியின் பெயரையோ அல்லது வில்- அம்பு சின்னத்தையோ பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மேலும் இரு பிரிவினரும் தங்கள் அணிக்கான 3 புதிய பெயர்களை திங்கட்கிழமைக்குள்(நாளை) தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவதுடன், தேவையான இலவச சின்னங்களை தேர்வு செய்து பரிந்துரைக்குமாறு அதில் கோரியுள்ளது.
இதன்பேரில் இரு அணிக்கும் தேர்தல் ஆணையம் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஒதுக்கும் என தெரிகிறது.
இந்த உத்தரவு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணிக்கு மற்றொரு பின்னடைவாக கருதப்படுகிறது. அந்தேரி இடைத்தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை.
அதேநேரம் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் புதிய சின்னம் மற்றும் கட்சி பெயருடன் களம் இறங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். இதனால் மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.