யார் வேண்டுமானாலும் உரிமை கோர சிவசேனா தெருவில் கிடைக்கும் பொருள் அல்ல- உத்தவ் தாக்கரே
யார் வேண்டுமானாலும் உரிமை கோர சிவசேனா தெருவில் கிடக்கும் பொருள் அல்ல என உத்தவ் தாக்கரே ஆவேசமாக கூறி உள்ளார்.
தெருவில் கிடக்கும் பொருள் அல்ல
சிவசேனாவின் 62-வது நிறுவன நாளையொட்டி நேற்று சேனா பவனில் நடந்த நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
சிலர் சிவசேனா தெருவில் கிடக்கும் பொருள், அதை யார் வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் என நினைக்கின்றனர். சிவசேனாவின் அடித்தளம் வலுவானது, ஆழமானது. அதை யாரும் உரிமை கோர முடியாது. 'மார்மிக் ' (கார்டூன்) மூலம் சிவசேனாவுக்கான விதைகள் போடப்பட்டது. அது 62 ஆண்டுகளுக்கு அமைதியற்ற மனங்களுக்காக குரல் கொடுத்தது. சிவசேனா இல்லை என்றால் மராத்தியர்களுக்கும், இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கும் என்ன நடந்து இருக்கும் யாரும் நினைத்து பார்க்க முடியாது.
எதுவும் செய்யாமல் பாராட்டு விழா
இந்தியா தற்போது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. ஆனால் தற்போது நிலவும் சூழ்நிலையை பார்க்கும் போது, நாம் மீண்டும் அடிமை காலத்திற்கு திரும்புகிறோமா என்ற எண்ணம் தோன்றும். சிவசேனாவுக்கு ஒருபோதும் அழியாது. மாநில அரசை கவிழ்க்க உங்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் ராணுவத்திற்கு ஆள் சேர்க்க பணமில்லை.
இன்று சிலர் (ஏக்நாத் ஷிண்டே) எதுவும் செய்யாமல் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி கொள்கின்றனர். மந்திரிகள் எந்த பொறுப்பும் இன்றி உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.