ஏக்நாத் ஷிண்டே அணிக்கு 'கேடயம் மற்றும் இரட்டை வாள்' சின்னம் - தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு
ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ‘கேடயம் மற்றும் இரட்டை வாள்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே தலைமையிலான ஒரு அணியாகவும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்படுகிறது. இந்த இரண்டு அணிகளும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என அறிவித்து, இந்திய தேர்தல் ஆணையம் தங்களுக்கு 'வில் அம்பு' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், மராட்டிய மாநிலம் அந்தேரி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அண்மையில் தேர்தலை அறிவித்தது. இந்த நிலையில் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு இரு அணிகளும் உரிமை கோரியதல், அவற்றை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கம் செய்தது.
இதையடுத்து உத்தவ் தாக்கரே அணிக்கு 'சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே' என்ற பெயரையும், தீப்பந்தம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அதேநேரத்தில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு 'பாலாசாகேபஞ்சி சிவசேனா' (பாலாசாகேப்பின் சிவசேனா) என்ற பெயரை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
எனினும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கான சின்னம் ஒதுக்கப்படவில்லை. சின்னம் தொடர்பாக விருப்ப சின்னங்களின் புதிய பட்டியலை தாக்கல் செய்ய அந்த அணிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. ஏக்நாத் ஷிண்டே அணி கேட்ட 3 சின்னங்களும் தேர்தல் ஆணையம் வசம் உள்ள சின்னங்கள் பட்டியலில் இல்லாததால், புதிய பட்டியலை தாக்கல் செய்ய ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து 'அரசமரம்', 'கேடயம் மற்றும் இரட்டை வாள்' அல்லது 'ஒளிரும் சூரியன்' ஆகிய 3 சின்னங்களை விருப்பமாக கோரி தேர்தல் ஆணையத்தில் ஏக்நாத் ஷிண்டே அணி முறையிட்டது. இதன் அடிப்படையில் கேடயம் மற்றும் இரட்டை வாள் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.