மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு
மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு ஆவணங்களை முறைப்படி என்.ஐ.ஏ.விடம் கர்நாடக போலீசார் ஒப்படைத்தனர்.
பெங்களூரு:
மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு ஆவணங்களை முறைப்படி என்.ஐ.ஏ.விடம் கர்நாடக போலீசார் ஒப்படைத்தனர்.
மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே நாகுரி பகுதியில் கடந்த மாதம்(நவம்பர்) 19-ந் தேதி ஆட்டோவில் வெடிவிபத்து சம்பவம் நடந்தது. இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோவில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்றும், அதை கொண்டு வந்தது பயங்கரவாதியான ஷாரிக் என்பதும் தெரியவந்தது. மேலும் இது திட்டமிட்ட சதி என்பதையும், ஆனால் ஷாரிக் அதை தான் கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு முன்பே அது அதிர்வுகளால் வெடித்து விட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து கர்நாடக போலீசாரும், தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகளும் தீவிரமாக விசாரிக்க தொடங்கினர்.
திடுக்கிடும் தகவல்கள்
குண்டுவெடிப்பில் காயம் அடைந்த பயங்கரவாதி ஷாரிக்கும், ஆட்டோ டிரைவர் புருஷோத்தமும் மங்களூருவில் உள்ள பாதர் முல்லர் ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஷாரிக்கின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் ஆஸ்பத்திரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
போலீஸ் விசாரணையில் ஷாரிக் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் பயங்கரவாத அமைப்பை நிறுவ திட்டமிட்டார் என்றும், அதற்காக ஆட்களை மூளைச்சலவை செய்து சேர்த்து வந்தார் என்றும் தகவல்கள் வெளியாகின. மேலும் அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றும், அதே பாணியில் ஆட்களை சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளித்தார் என்றும் கூறப்படுகிறது.
வெடிகுண்டுகளை தயாரித்தார்
இதுதவிர அவர் வெடிகுண்டுகளை தயாரித்தார் என்றும், செல்போன் மூலம் அதிநவீன முறையில் வெடிகுண்டுகளை தயாரித்து பல்வேறு இடங்களில் நாசவேலையை அரங்கேற்ற திட்டமிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பயங்கரவாதி ஷாரிக்கின் உடல்நிலை பற்றி போலீசார், டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். 45 சதவீத காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஷாரிக், தற்போது உடல்நிலை தேறி வருவதாகவும், விரைவில் அவர் குணமடைந்து விடுவார் என்றும் டாக்டர்கள் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன்பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிக்குமார் தலைமையிலான போலீசார் ஷாரிக்கிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அரசிடம் கோரிக்கை
நேற்று முன்தினமும் ஷாரிக்கிடம் போலீசார் 4 மணி நேரம் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றனர். இதுபோல் தமிழ்நாடு போலீசாரும் ஷாரிக்கிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மங்களூரு மற்றும் கோவை கார் வெடிப்பு சம்பவங்களுக்கு தொடர்பு உள்ளதா?, தமிழ்நாட்டில் ஷாரிக் சுற்றித்திரிந்த மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் நடந்தது என்ன?, அங்கு அவர் எங்கு தங்கி இருந்தார்?, யார், யாருடன் தொடர்பில் இருந்தார்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு ஷாரிக் போலீசாரிடம் பதில் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர் கூறிய தகவல்கள்படி அந்த பகுதிகளில் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். மேலும் விசாரணையையும் முடுக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் இவ்வழக்கை கர்நாடக போலீசாரிடம் இருந்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கோர்ட்டில் ஆவணங்கள் தாக்கல்
அதன்படி நேற்று இந்த வழக்கு கர்நாடக போலீசாரிடம் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அனைத்து ஆவணங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம், கர்நாடக போலீசார் முறைப்படி ஒப்படைத்தனர். அதையடுத்து ஷாரிக்கை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மங்களூரு 7-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆவணங்களை தாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள், ஷாரிக்கிடம் ஆஸ்பத்திரியில் வைத்தே விசாரணை நடத்துவார்களா? அல்லது அவரை பெங்களூரு அல்லது டெல்லிக்கு கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தபடி விசாரணை மேற்கொள்வார்களா? என்று தெரியவில்லை. அதுபற்றி விரைவில் முறையாக அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
10 பேரை கடல் வழியாக...
இதற்கிடையே என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியிலும் விசாரணையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுடன் சேர்ந்து காசர்கோடு போலீசாரும் இச்சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஷாரிக், போதைப்பொருள் கடத்தியதாகவும், போதைப்பொருள் கடத்தலில் அவருக்கு நெருகிய தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவர் கொச்சி துறைமுக வழியாக போதைப்பொருள் கடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் கேரளாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் உள்பட 10 பேரை கடல் வழியாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரிடம் அனுப்பியதாகவும், அவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பயிற்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு
மேலும் அவர்களில் சிலர் இறந்து விட்டதாகவும், சிலர் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றியும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு, மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் கண்டிப்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். அதுபற்றியும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ஷாரிக்கிற்கு வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பியது யார்?
பயங்கரவாதி ஷாரிக்கிற்கு டார்க் வெப் மூலம் வெளிநாடுகளில் இருந்து பணம் வந்திருப்பதாகவும், டாலர்களாக வந்த அந்த பணத்தை இந்திய ரூபாயாக மாற்றி மைசூருவில் உள்ள பல வங்கிகளில் ஷாரிக் சேமித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜார்கண்ட், மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஷாரிக் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மைசூருவில் வசித்து வரும் பலருக்கு நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் ஷாரிக் பணம் செலுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து 40-க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தற்போது என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 3 குழுக்கள் அமைத்து அவர்கள் இந்த வழக்கை விசாரிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.