சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தல் விவகாரம்: பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்ற சுப்ரீம் கோர்ட்டு
சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தல் விவகாரம் தொடர்பாக பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு திரும்ப பெற்றது.
புதுடெல்லி,
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில், 2 பேருக்கு வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் சார்பில் வெற்றி சான்றிதழ் பெற்ற காரைக்குடி செக்காலை கோட்டையை சேர்ந்த தேவி, மற்றொரு வெற்றி சான்றிதழ் பெற்றவரான பிரிதர்ஷினி (அ.தி.மு.க.) பஞ்சாயத்து தலைவியாக பொறுப்பேற்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கிளை, சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்கால தடைவிதித்தது. மேலும் அ.தி.மு.க. ஆதரவாளர் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது. ஏனெனில் தேர்தல் அதிகாரி முதலில் தேவிக்கு வழங்கிய சான்றிதழ் தான் செல்லுபடியாகும், தேர்தலில் வெற்றி சான்றிதழ் வழங்கியதோடு தேர்தல் அதிகாரியின் பணி முடிந்துவிட்டது. அடுத்த சான்றிதழ் வழங்க அவருக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்தது. இதனையடுத்து, இதை எதிர்த்து பிரியதர்ஷினி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.ஆர்.கவாய் 'ஐகோர்ட்டு உத்தரவில் தலையிட விரும்பவில்லை. எனவே, பிரிதர்ஷினியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பிரியதர்ஷினி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 14-ந் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறுவதாகவும், இந்த விவகாரத்தை விரிவாக விசாரிப்பதாகவும் தெரிவித்தது.