நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த மருந்துகடைக்காரர் கொலை; குற்றவாளி மீது சிறையில் சக கைதிகள் சரமாரி தாக்குதல்
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட மருந்துகடைக்காரரை 2 பேர் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.
மும்பை,
ஞானவாபி மதவழிபாட்டு தலம் தொடர்பாக கடந்த மே மாதம் ஆங்கில தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற நபர் இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித்தொடர்பாளரான நுபுர் சர்மா இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள், வன்முறை, கொலை சம்பவங்களும் அரங்கேறியது.
அந்த வகையில், மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டம் கந்தஹர் பகுதியில் மருந்துக்கடை நடத்தி வந்த உமேஷ் கோலி என்ற நபர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.
அவர் கடந்த மாதம் 21-ம் தேதி இரவு தனது மருந்துக்கடையை மூடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2 பேர் உமேஷை சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றது.
இந்த கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான இர்பான் கான், ஷாரூக் பதான் உள்பட 7 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மும்பையில் உள்ள அர்தூர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மருந்துக்கடைக்காரர் உமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குற்றவாளி ஷாருக் பதான் மீது சக கைதிகள் இன்று சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஷாருக் பதானுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலை குற்றவாளி ஷாருக் பதான் மீது தாக்குதல் நடத்திய சக கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.