டைரக்டர் சஜித்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்த டெல்லி மகளிர் ஆணைய தலைவிக்கு பாலியல் மிரட்டல்கள்...


டைரக்டர் சஜித்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்த டெல்லி மகளிர் ஆணைய தலைவிக்கு பாலியல் மிரட்டல்கள்...
x
தினத்தந்தி 12 Oct 2022 6:58 AM GMT (Updated: 12 Oct 2022 7:10 AM GMT)

டைரக்டர் சஜித்கானை பிக்பாசில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய மந்திரிக்கு கடிதம் அனுப்பியதில் இருந்து பாலியல் மிரட்டல்கள் வருகின்றன என டெல்லி மகளிர் ஆணைய தலைவி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நடிகைகள் பலர் மீ டூ இயக்கம் மூலம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தினர். இதில் பிரபல இந்தி டைரக்டர் சஜித்கானும் சிக்கினார். இவர் மீது 10 பெண்கள் பாலியல் புகார் அளித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16-வது சீசன் நிகழ்ச்சியில் சஜித்கானும் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். மீ டூ புகாரில் சிக்கிய சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் கண்டன குரல் எழுப்பினர்.

இந்தி நடிகை மந்தனா கரிமி சினிமாவை விட்டே விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சஜித்கான் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த காமகொடூரரை பிக்பாஸ் போட்டியாளராக சல்மான்கான் எப்படி அறிமுகப்படுத்தலாம் என்று விளாசி உள்ளார்.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவியான சுவாதி மலிவால் மத்திய மந்திரி அனுராக் தாக்குருக்கு எழுதி உள்ள கடிதத்தில், டைரக்டர் சஜித்கான் மீது 10 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து உள்ளனர். அவர் மோசமானவர் என்பது இதன் மூலம் தெரிகிறது. அப்படிப்பட்டவரை சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க செய்து இருப்பது தவறானது. அவரை உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மலிவால் இன்று கூறும்போது, பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளுக்கு ஆளான டைரக்டர் சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்க கோரி மத்திய மந்திரி அனுராக் தாக்குருக்கு கடிதம் எழுதியதில் இருந்து சமூக ஊடகம் வழியே தனக்கு பாலியல் பலாத்கார மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன என தெரிவித்து உள்ளார்.

எங்களது பணியை நிறுத்த அவர் விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இதுபற்றி டெல்லி போலீசில் நான் புகார் ஒன்றை அளித்து உள்ளேன். எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த மிரட்டல்களை விடுத்த நபர்களை டெல்லி போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

டைரக்டர் சஜித்கானுக்கு எதிராக சலோனி சோப்ரா, ஷெர்லின் சோப்ரா, ஆகானா கும்ரா மற்றும் மந்தனா கரிமி உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளனர்.


Next Story