பெங்களூருவில் கடும் குளிரால் மக்கள் அவதி


பெங்களூருவில் கடும் குளிரால் மக்கள் அவதி
x

பெங்களூருவில் கடும் குளிரால் மக்கள் அவதிப்பட்டனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று கடும் குளிர் காற்று வீசியதால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.

கடும் குளிர்

சென்னை அருகே வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் சின்னம் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை உள்பட வட தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்த மாண்டஸ் புயல் சின்னத்தின் தாக்கம் கர்நாடகத்திலும் எதிரொலித்து வருகிறது. தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் லேசான வெயில் தாக்கம் இருந்தது. சூரியன் அவ்வப்போது எட்டி பார்த்தது. இதனால் சூரிய வெளிச்சம் வருவதும், பின்னர் மறைவதுமாக இருந்தது. இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று அதிகாலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் நகரில் காலையில் இருந்து கடும் குளிர் காற்று வீசியது.

கவச உடைகள்

சில நேரங்களில் லேசான சாரல் மழை பெய்தது. பகல் நேரத்தில் சாலைகளில் நடந்து சென்ற மக்கள் குளிரின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க 'சுவெட்டர்' உள்ளிட்ட உடைகளை அணிந்திருந்தனர். கடும் குளிரையும் தாங்க முடியாமல் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். இதனால் சாலைகளில் வாகன நெரிசல் வழக்கத்தை விட சற்று குறைவாகவே இருந்தது. நகரில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 64 டிகிரி பதிவானது. பெங்களூருவில் இன்றும் (சனிக்கிழமை) வெப்பநிலை அதே அளவில் இருக்கும் என்றும், மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயல் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story