சத்தீஷ்காரில் நடந்த பயங்கர துப்பாக்கி சண்டை : 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
இந்த ஆண்டில் இதுவரை நடந்த பயங்கரவாதிகள் ஒழிப்பு வேட்டையில் 112 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாராயண்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர்-பிஜப்பூர் மாவட்டங்களின் எல்லையில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்பு படையினர் நக்சலைட் ஒழிப்பு வேட்டையில் இறங்கினர். தந்தேவடா, நாராயண்பூர், பஸ்தார் மாவட்டங்களின் ரிசர்வ் போலீஸ் படை மற்றும் பஸ்தார் சிறப்பு அதிரடி படையினர் இந்த ஆபரேஷனில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நேற்று பகல் 11 மணி அளவில், தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலில் இறங்க, அது என்கவுண்ட்டர் வேட்டையாக மாறியது.
நீண்ட நேரம் நடந்த பயங்கர துப்பாக்கி சண்டை ஓய்ந்ததும், சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது மாவோயிஸ்டுகள் சீருடை அணிந்த 7 பயங்கரவாதிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அந்த இடத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டில் இதுவரை நடந்த பயங்கரவாதிகள் ஒழிப்பு வேட்டையில் 112 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த ஏப்ரல் 16-ந்தேதி காங்கர் மாவட்டத்தில் நடந்த என்கவுண்ட்டர் வேட்டையில் ஒரே நாளில் 29 நக்சலைட்டுகள் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.