பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு! ரூ.4 லட்சம் கோடி சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!


பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு! ரூ.4 லட்சம் கோடி சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
x

சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிந்ததால், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் சரிவை ஏற்படுத்தியது.

மும்பை,

இந்திய பங்குச் சந்தையில், சென்செக்ஸ் மற்றும் நிப்டி கிட்டத்தட்ட இரண்டு சதவீதம் சரிந்தன. பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்துவதுதான் இதற்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

செப்டம்பர் 21 அன்று, அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கை வட்டி விகிதங்களில் 75 அடிப்படை புள்ளிகள் உயர்வை அறிவித்தது, உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளை வீழ்ச்சியடையச் செய்தது.

இதன் காரணமாக ஒட்டுமொத்த சர்வதேச சந்தையிலும் பங்குச்சந்தை முதலீடுகள் குறைந்து அதிகளவிலான சரிவைப் பதிவு செய்துள்ளது. இதன் தாக்கம் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்துள்ளது.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் மட்டும் மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் ரூ.4 லட்சம் கோடி வரையிலான சரிவை எதிர்கொண்டு உள்ளனர்.

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1020.80 புள்ளிகள் சரிந்து 58,098.92 புள்ளிகளை அடைந்துள்ளது. நிப்டி குறியீடு 302.45 புள்ளிகள் சரிந்து 17,327.35 புள்ளிகளை அடைந்துள்ளது.

வங்கிப் பங்குகள் கடும் விற்பனை அழுத்தத்தை சந்தித்தன. பாரத ஸ்டேட் வங்கி 2.99 சதவீதம் சரிந்து ரூ. 550.45ஐ எட்டியது. ஹெச்டிஎப்சி வங்கி 2.64 சதவீதம் சரிந்து ரூ. 1446.50ஐ எட்டியது. ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, கோடக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட அனைத்து முக்கிய வங்கிகளும் கடும் நஷ்டத்தில் முடிவடைந்தன.

பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, ஹெச்டிஎப்சி, டைட்டன், பார்தி ஏர்டெல் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டமடைந்தன.

பங்குச்சந்தையில் விற்பனை அழுத்தம் காரணமாக முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 4 லட்சம் கோடி குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story