பகவத் கீதை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரின் கருத்து - பா.ஜ.க. கண்டனம்


பகவத் கீதை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரின் கருத்து - பா.ஜ.க. கண்டனம்
x

கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஜிஹாத் பற்றி பேசுகிறார் என சிவ்ராஜ் பாட்டீல் தெரிவித்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மொஹ்சினா கித்வாயின் வாழ்க்கை வரலாறு புத்த வெளியீட்டு விழாவின் போது முன்னாள் மக்களவை சபாநாயகரும், மத்திய மந்திரியுமான சிவராஜ் பாட்டீல் பேசிய கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விழாவில் அவர் கூறியதாவது;-

"இஸ்லாம் மதத்தில் ஜிஹாத் பற்றி அதிகம் பேசப்படுவதாக கூறப்படுகிறது. இது குர்ஆனில் மட்டுமல்ல, மகாபாரதத்திலும், கீதையில் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஜிஹாத் பற்றி பேசுகிறார், இந்த விஷயம் குரான் அல்லது கீதையில் மட்டுமல்ல, கிறிஸ்தவத்திலும் உள்ளது.

மொஹ்சினா கித்வாயின் புத்தகம், உங்கள் மதத்தைப் பின்பற்றும் அதே வேளையில் அனைத்து மதங்களையும் மதிப்பது பற்றி பேசுகிறது. உலகில் அமைதி நிலவ வேண்டும்" என்று சிவராஜ் பாட்டீல் கூறினார்.

அவரது இந்த கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் வாக்குவங்கி அரசியல் நடத்துவதாக குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுதன்ஷு திரிவேதி, "பாட்டீலின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அல்லது சோனியா காந்தி பதிலளிக்க வேண்டும்

மகாத்மா காந்தி பகவத் கீதை பற்றிய தனது வர்ணனையில் அதை 'அனாசக்தி யோகா' (தன்னலமற்ற செயல்)-ன் ஆதாரம் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் பாலகங்காதர திலகர் 'கர்ம யோகா' தத்துவத்தை கீதையின் மூலம் விளக்கினார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் தற்போது கீதையில் 'ஜிஹாத்' இருப்பதாக கூறுகிறார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதே போல் பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் பிரேம் சுக்லா இது குறித்து கூறுகையில் இந்து, இந்துத்வா மற்றும் இந்துஸ்தானை அவமதிக்கும் சதியில் காங்கிரஸ் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளது என்றும், பாட்டீலின் கருத்துகள் இதற்கு மற்றொரு அத்தியாயம் என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பகவத் கீதை குறித்து சிவ்ராஜ் பாட்டீல் கூறிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பகவத் கீதை இந்திய நாகரிகத்தின் முக்கிய அடித்தளமாகும்" என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story