தன்னலமற்ற பொதுசேவை அவரை காப்பாற்றும் - சந்திரபாபு நாயுடு மகனுக்கு ரஜினிகாந்த் ஆறுதல்
தன்னலமற்ற பொதுசேவை சந்திரபாபு நாயுடுவை காப்பாற்றும் என்று அவரது மகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார்.
விஜயவாடா,
ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த சனிக்கிழமை, சுமார் ரூ.300 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா கோர்ட்டு 10-ந்தேதி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, அவர், கிழக்கு கோதாவரி மாவட்ட தலைநகர் ராஜமுந்திரியில் (ராஜமகேந்திரவரம்) உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது உயிருக்கான அச்சுறுத்தலை கருதி, தனியாக உள்ள 'சினேகா' என்ற பிளாக்கில் அவரை அடைத்தனர். அவருக்கு '7691' என்ற கைதி எண் ஒதுக்கப்பட்டது. அவருக்கு சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு தனி உதவியாளரும், 5 பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வீட்டு உணவும், மருந்துகளும் அளிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மகன் நாரா லோகேஷிடம் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். தைரியமாக இருக்குமாறு நாரா லோகேஷிற்கு ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் சந்திரபாபு நாயுடு தவறு செய்யமாட்டார் என்றும் தன்னலமற்ற பொதுசேவை அவரை காப்பாற்றும் என்றும் நடிகர் ரஜினிகாந்த், நாரா லோகேஷிற்கு ஆறுதல் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.