தேசத்துரோக வழக்கு: ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் ஜே.என்.யூ மாணவர் தலைவர் ஷர்ஜில் இமாம்
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக பேசியதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே என் யூ) மாணவர் தலைவர் ஷர்ஜில் இமாம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புதுடெல்லி,
தேச துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷர்ஜீல் இமாம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது.
முன்னதாக, 2020ல் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக பேசியதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே என் யூ) மாணவர் தலைவர் ஷர்ஜில் இமாம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் ஜனவரி, 2020ல் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஷர்ஜீல் இமாம் மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே தேசத்துரோக வழக்கு பதிவதற்கு இடைக்கால தடை விதித்து சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மேலும், தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரலாம் என்று தெரிவித்தது.
அதன்படி, முதலில் விசாரணை கோர்ட்டில் மனு அளித்து விசாரணை முடிந்த பின், ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம்.
இதனையடுத்து, தேசத் துரோகச் சட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் வழங்கிய தீர்ப்பைக் கருத்தில் கொண்டு, டெல்லி ஐகோர்ட் ஜாமீன் விண்ணப்பத்தை வாபஸ் பெறுமாறு ஷர்ஜீல் இமாம் வழக்கறிஞரை கேட்டுக் கொண்டது. மேலும், ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை நாட அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து, தேச துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷர்ஜீல் இமாம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு இன்று வாபஸ் பெறப்பட்டது.