தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது பாதுகாப்பு பணியாளர் மாரடைப்பால் உயிரிழப்பு
மிசோரமில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது பாதுகாப்பு பணியாளர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வால்,
நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மிசோரம் மாநிலத்தில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று காலை மிசோரம் மாநிலம் சம்பை மாவட்டத்தில் உள்ள வாங்சியா வாக்குச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டாவது இந்திய ரிசர்வ் பட்டாலியனைச் (ஐஆர்பிஎன்) சேர்ந்த லால்ரின்புயா (28 வயது) என்பவரை காலையில், மற்ற பாதுகாப்பு பணியாளர்கள் எழுப்ப முயன்றபோது, அவர் இறந்து கிடந்தார். அதிகாலை 4.45 மணியளவில் மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் கவ்சாவல் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான கவுல்குல் கிராமத்திற்கு அனுப்பப்பட்டது. தேர்தல் பணியின் போது உயிரிழந்த லால்ரின்புயா குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று சம்பை துணை ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜேம்ஸ் லால்ரிஞ்சனா கூறினார்.