ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது - மல்லிகார்ஜுன கார்கே
ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
டெல்லி,
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போது இந்த நடைபயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கி நடைபெற்றது. காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக மூவர்ணக் கொடியை ஏந்தியபடி நடைப்பயணத்தைத் தொடர்ந்தனர்.
இதற்கிடையே, காஷ்மீரின் காசிகுண்ட் பகுதியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடைபயணத்தை மீண்டும் தொடங்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; காஷ்மீரில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது. இந்தியா ஏற்கனவே இரண்டு பிரதமர்கள், பல தலைவர்களை இழந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் ராகுலின் ஒற்றுமை பயணத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.