பாதுகாப்பை மீறி கர்நாடக முதல்-மந்திரியை நெருங்கிய நபரால் பரபரப்பு
பெங்களூருவில் உள்ள சட்டசபை வளாகம் முன்பு ஜனநாயக தினம் குறித்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது.
பெங்களூரு,
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக சித்தராமையா உள்ளார். இந்நிலையில் பெங்களூர் விதான சவுதா (கர்நாடகா சட்டசபை கட்டடம்) முன்பு இன்று ஜனநாயக தினம் கொண்டாட்டம் நடந்தது. இதற்கான நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சித்தராமையா, அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மந்திரி மகாதேவப்பா மேடையில் பேசி கொண்டிருந்தார். அப்போது சித்தராமையா மேடையில் போடப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தார். இந்த வேளையில் திடீரென்று மேடை முன்பு அமர்ந்திருந்த பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்து நபர் ஒருவர் ஆக்ரோஷமாக மேடையை நோக்கி ஓடினார். மேடை அருகே சென்றதும் ஜம்ப் செய்து சித்தராமையாவை நோக்கி ஓட முயன்றார். இதை கவனித்த பாதுகாவலர்கள் உடனடியாக அந்த இளைஞரை தடுத்தனர். இதனால் அவர் மேடையில் விழுந்தார். அதன்பிறகு அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை குண்டுகட்டாக இழுத்து சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். மேடையில் பாதுகாப்பை மீறி கர்நாடகா முதல்-மந்திரியை நோக்கி ஓடிய நபரால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இருப்பினும் கூட நிகழ்ச்சி தடைப்படவில்லை. நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது.
முதற்கட்ட விசாரணையில், அவர் மகாதேவ் நாயக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. முதல்-மந்திரிக்கு சால்வை அணிவிக்கும் முயற்சியில் அவரை அணுகியதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு சால்வை அணிவிக்க முயன்ற மகாதேவ் நாயக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.