குஜராத்தில் பள்ளி வகுப்பறை சுவர் இடிந்து விபத்து: நொடியில் உயிர் தப்பிய மாணவர்கள்


குஜராத்தில் பள்ளி வகுப்பறை சுவர் இடிந்து விபத்து: நொடியில் உயிர் தப்பிய மாணவர்கள்
x

குஜராத்தில் பள்ளி வகுப்பறை சுவர் இடிந்து விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் வகோடியா சாலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது வகுப்பறையின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுவர் ஓரத்தில் அமர்ந்திருந்த மாணவர் மற்றும் சில மாணவர்கள் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அதே நேரத்தில் வகுப்பில் இருந்த மற்ற மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியே ஓடிவந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வதோதரா தீயணைப்பு வீரர்கள் பள்ளிக்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார். உடனடியாக அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது நலமுடன் இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், "ஒரு பயங்கர சத்தம் கேட்டது. உடனடியாக அங்கு ஓடிச்சென்று பார்த்தோம். அப்போது சுவர் இடிந்து கீழே விழுந்ததில் ஒரு மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. நாங்கள் உடனடியாக மற்ற மாணவர்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினோம். மாணவர்களின் சைக்கிள்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சுவர் விழுந்தது. இதில், பல சைக்கிள்களும் சேதமடைந்தன" என்றார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story