திமுக ஆட்சியில் பட்டியலின தலைவர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை - எல்.முருகன்


திமுக ஆட்சியில் பட்டியலின தலைவர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை - எல்.முருகன்
x

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்று மத்திய இணை-மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக டெல்லி பாஜக தலைமையகத்தில் மத்திய இணை-மந்திரி எல்.முருகன், பாஜக நிர்வாகிகள் விபி துரைசாமி, கார்த்தியாயினி ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மத்திய இணை-மந்திரி எல்.முருகன் கூறியதாவது, "தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படும் தொடர் வன்முறைகள் தொடர்பாக இன்று தேசிய எஸ்சி ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சென்று புகார் கொடுக்க உள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகமாகியுள்ளன.

ஒவ்வொரு வருடமும் பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சென்னையில் இரு தினங்கள் முன்பு பட்டியலின தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது நம் அனைவருக்கும் தெரியும். இதுதான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் நிலைமை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது.

பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் தமிழகத்தில் தினம் தினம் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியில் தமிழகத்தில் பட்டியலின தலைவர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அவர்கள் தினம் தினம் தீண்டாமையை எதிர்கொள்கின்றனர். சமூக நீதி காவலர்கள் என சொல்லிக்கொள்ளும் திமுக அரசு, அதனை முறையாக பின்பற்றவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனி சமூக நீதியை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story