ரூ.84¾ லட்சம் கையாடல்; வங்கி காசாளர் தூக்குப்போட்டு தற்கொலை
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.84¾ லட்சத்தை கையாடல் செய்த சம்பவத்தில் காசாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வங்கி மேலாளர் தலைமறைவாகி விட்டார்.
கோலார் தங்கவயல்:
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.84¾ லட்சத்தை கையாடல் செய்த சம்பவத்தில் காசாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வங்கி மேலாளர் தலைமறைவாகி விட்டார்.
கர்நாடகா கிராமிய வங்கி
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் தாலுகா கல்லுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில். இவர் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கர்நாடகா கிராமிய வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார். அதே வங்கியில் ஜி-பொம்மசந்திரா கிராமத்தைச் சேர்ந்த மணிந்திரா ரெட்டி(வயது 30) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சுனில் வாடதஹொசஹள்ளி அருகே ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கவுரிபித்தனூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், சுனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.84.78 லட்சம் முறைகேடு
இந்த நிலையில் காசாளர் சுனில் தற்கொலை செய்து கொண்டது, வங்கி மேலாளர் மணிந்திரா ரெட்டி பணிக்கு வராதது குறித்த விவரத்தை வங்கி ஊழியர்கள், வங்கியின் பொது மேலாளருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் வங்கி கணக்குகளை தணிக்கை செய்தனர். அதில், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து கடந்த மாதம்(செப்டம்பர்) 29, 30-ந்தேதிகளில் வங்கி மேலாளர் மணிந்திரா ரெட்டி குஜராத், கொல்கத்தாவில் உள்ள 3 பேருக்கும், டெல்லியில் உள்ள பாலாஜி ட்ரேடர்சுக்கும், விஷன் குளோபல் நிறுவனத்துக்கும் ஆன்லைன் மூலமாக ரூ.84.78 லட்சத்தை முறைகேடாக ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பொது மேலாளரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கவுரிபித்தனூர் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள வங்கி மேலாளர் மணிந்திரா ரெட்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.
இடமாற்றம்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்ததில் மேலாளர் மணிந்திரா ரெட்டிக்கு உடந்தையாக இருந்ததால் போலீசுக்கு பயந்து காசாளர் சுனில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் சுனில் இதுபோல் ஏற்கனவே பல மோசடிகளில் ஈடுபட்டு இருந்ததும், தற்போது போலீசாருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.