எஸ்.சி., எஸ்.டி. கூடுதல் இடஒதுக்கீடு, காங்கிரஸ் யாத்திரையால் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை-குமாரசாமி பேட்டி
எஸ்.சி., எஸ்.டி. கூடுதல் இடஒதுக்கீடு, காங்கிரஸ் யாத்திரையால் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மைசூரு:
பாதிப்பு இல்லை
ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நேற்று மைசூருவில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இடஒதுக்கீடு அதிகரிப்பால் எந்த கட்சிக்கும் எந்த லாபமும் ஏற்படாது. முன்பு தேவேகவுடா பிரதமராக இருந்தபோது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வாங்கி தந்தார். அதன்காரணமாக எம்.பி., எம்.எல்.ஏ. ஆனவர்கள் தேவேகவுடாவை நினைக்கமாட்டார்கள். இடஒதுக்கீடு அதிகரிப்பதால் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இதேபோல், ராகுல்காந்தியின் பாதயாத்திரையாலும் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பலம் என்ன என்பதை அடுத்து வரும் தேர்தலில் காட்டுவோம்.
பாடம் புகட்டுவார்கள்
மைசூரு திப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயர் உடையார் என மாற்றப்பட்டுள்ளது. பிரதாப் சிம்ஹாவை, பெயர் மாற்ற தான் மக்கள் எம்.பி.யாக்கி உள்ளனரா?. மாவட்டம் முழுகூதும் ஏராளமான மக்கள் பிரச்சினைகள் உள்ளன. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு கஷ்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், பெயரை மாற்றுவதில் பிரதாப் சிம்ஹா குறிக்கோளாக உள்ளார்.
வரும் தேர்தலில் அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.