சந்தேஷ்காளி விவகாரம்.. மேற்கு வங்காள அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு


crimes against women in Sandeshkhali
x

சந்தேஷ்காளி விவகாரத்தில் யாரோ ஒருவரை பாதுகாப்பதில் அரசு ஏன் அக்கறை காட்ட வேண்டும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

புதுடெல்லி:

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சந்தேஷ்காளி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பழங்குடியின மக்களின் நிலங்களை பறித்துக்கொண்டதாகவும், பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் கூறி பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தையே உலுக்கிய இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஏப்ரல் 10-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவில், சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் நில அபகரிப்பு புகார்களை விசாரித்து, அடுத்த விசாரணையின்போது விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்காள அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவானது, காவல்துறை உட்பட ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தின் உறுதியை குலைக்கும் வகையில் இருப்பதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏப்ரல் 29-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சில தனிநபர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மாநில அரசு ஏன் மனுதாரராக வந்து வாதாடவேண்டும்? என்று மேற்கு வங்காள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, யாரோ ஒருவரை பாதுகாப்பதில் அரசு ஏன் அக்கறை காட்ட வேண்டும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் மாநில அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

சந்தேஷ்காளியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது.


Next Story