விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி-சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
புதுடெல்லி,
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களைப் பெற்றுவிட்டு, அவற்றைத் திருப்பிச் செலுத்தவில்லை. அவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார். அவரை நாடு கடத்திக் கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அவரை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக்கோரும் நடவடிக்கை மும்பை தனிக்கோர்ட்டில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு தடை கோரி விஜய் மல்லையா தரப்பில் மும்பை ஐகோர்ட்டை நாடினார். அங்கு அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. உடனே அவர் தரப்பில் 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதற்கிடையே கோர்ட்டு இடைக்கால தடை எதுவும் விதிக்காத நிலையில், விஜய் மல்லையாவை 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி மும்பை தனிக்கோர்ட்டு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது. இப்படி அறிவிக்கிறபோது, அவரது சொத்துகளை பறிமுதல் செய்கிற அதிகாரம், வழக்கு தொடுக்கிற புலனாய்வு அமைப்புக்கு வந்து விடுகிறது.
இந்த நிலையில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அபய் எஸ். ஒகா, ராஜேஷ் பிண்டல் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு தொடர்பாக தான் விஜய் மல்லையாவிடம் இருந்து எந்த அறிவுறுத்தல்களையும் பெறவில்லை என தெரிவித்தார். இதையடுத்து அவரது மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.