பொதுவெளியில் கவனமாக பேச வேண்டும்: உதயநிதி ஸ்டாலினுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை
ரிட் மனுவில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சுப்ரீம் கோர்ட்டு 3 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, சனாதனம் பற்றி குறிப்பிட்டது பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. உதயநிதியின் பேச்சுக்கு பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் நாடு முழுவதும் உதயநிதிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தன்மீது பதியப்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை ஒரே வழக்காக மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும், மற்றபடி வழக்கின் விசாரணைக்கு தடை கோர வில்லை என்று அந்த மனுவில் கோரப்பட்டது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும் போது, "அமைச்சர் உதயநிதி பொதுவெளியில் பேசும்போது கவனமுடன் இருக்க வேண்டும்" என்று அறிவுரை வழங்கினர். விசாரணையை மே 6-ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளி வைத்தது. மேலும், ரிட் மனுவில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.