டெல்லி மந்திரிக்கு சிறையில் விசேஷ உணவுகளா? - உல்லாச விடுதி போல வசதிகள் அனுபவிப்பதாக பா.ஜ.க. பாய்ச்சல்
சிறையில் டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின், விடுமுறைகால உல்லாச விடுதி போல வசதிகள் அனுபவிப்பதாக பா.ஜ.க. சாடி உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அவர் விசேஷ உணவுகள் சாப்பிடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. அவர் விடுமுறைகால உல்லாச விடுதி போல வசதிகள் அனுபவிப்பதாக பா.ஜ.க. சாடி உள்ளது.
டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் சுகாதாரத்துறை மந்திரி பதவி வகித்து வந்த சத்யேந்தர் ஜெயின், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிக்கி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிறையில் ஒருவர் மசாஜ் செய்யும் காட்சி அடங்கிய வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அவர் சிறையில் காயம் அடைந்து, அதற்கு சிகிச்சை பெற்றார் என ஆம் ஆத்மி கட்சி கூறியது.
சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறப்பு வசதிகள் செய்து தந்த குற்றச்சாட்டின் பேரில், சிறை சூப்பிரண்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு 'பிசியோதெரபிஸ்ட்' என்னும் இயன்முறை சிகிச்சையாளர் சிகிச்சை அளிக்கவில்லை, அவருக்கு மசாஜ் செய்தவர், கற்பழிப்பு வழக்கில் போக்சோ சட்டத்தின்கீழ் கைதாகி, திகார் சிறையில் இருக்கும் கைதி ரிங்கு என தகவல்கள் வெளியாகின.
சிறப்பு உணவுகள் தர கோரிக்கை
டெல்லி சிறையில் தனக்கு தன் மத வழக்கப்படியான உணவுகள் குறிப்பாக காய்கள், பழங்கள் வழங்கப்படுவதில்லை என்று சத்யேந்தர் ஜெயின் தரப்பில் சமீபத்தில் கோர்ட்டில் அவரது வக்கீல் புகார் தெரிவித்தார்.
சிறையில் தான் உண்ணாநோன்பு இருக்கிறபோது, தனக்கு பழங்கள், உலர் பழங்கள், பேரீச்சம்பழம் போன்றவற்றை வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில் அமலாக்கத்துறை பதில் அளிக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு உணவுகள் சாப்பிடும் காட்சிகள்
இந்த நிலையில் செப்டம்பர் 13 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதியிட்ட வீடியோக்களில் சத்யேந்தர் ஜெயின் சிறையில் சமைக்காத பச்சைக் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட சிறப்பு உணவுவகைகளை சாப்பிடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
இந்த காட்சிகள் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
பா.ஜ.க. பாய்ச்சல்
சிறையில் உல்லாச விடுதி போல சத்யேந்தர் ஜெயின் வசதிகளை அனுபவிக்கிறார் என்று பா.ஜ.க. சாடி உள்ளது.
இதுபற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான மீனாட்சி லேகி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு கற்பழிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவிப்பவர் மசாஜ் செய்துள்ளார். நான் அப்படிப்பட்ட நபரை என் அருகிலேயே வர அனுமதிக்க மாட்டேன். ஆனால் அந்த நபர், அவரது காலுக்கு மசாஜ் செய்திருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் சொல்லும், செயலும் ஒன்றுக்கொன்று எதிராக உள்ளது.
சிறையில் கைதிகளுக்கு வழங்குகிற உணவு, மருத்துவ சேவைகள் பற்றி சிறை விதிகள் உண்டு. ஆனால் அவருக்கு (சத்யேந்தர் ஜெயின்) சிறை அறையில் டெலிவிஷன், 'பேக்' செய்யப்பட்ட உணவு, மசாஜ் என கூடுதலாக வசதிகள் கிடைப்பது, அவர் விடுமுறை உல்லாச விடுதியில் இருக்கிறாரோ என எண்ணத்தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.