சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: விசாரணையை கேரளாவுக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: விசாரணையை கேரளாவுக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி
x

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளாவுக்கு மாற்றக்கோரி சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை கேரள மாநிலத்துக்கு மாற்றக்கோரி சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கிருஷ்ண முராரி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

ரகு கணேஷ் சார்பில் மூத்த வக்கீல் பாலசுப்பிரமணியம், ராம் சங்கர், இளங்கோவன் ஆகியோர் ஆஜராயினர். சம்பவம் நடைபெற்றபோது போலீஸ் நிலையத்தில் மனுதாரர் இல்லை. 7 மணிக்கு அனைத்து சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. மனுதாரர் இரவு 11 மணிக்குதான் அங்கு வந்துள்ளார். மொத்தமுள்ள 105 சாட்சிகளில் 44 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுவிட்டதால், இந்த வழக்கு விசாரணையை கேரளாவுக்கு மாற்ற வேண்டும் என வாதிடப்பட்டது.

செல்வராணி தரப்பு வாதம்

கொலை செய்யப்பட்ட ஜெயராஜின் மனைவி செல்வராணி சார்பில் இந்திரா ஜெயசிங் ஆஜராகி, நல்ல நோக்கத்துக்காகவே சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணையை கண்காணித்தது என வாதிட்டார்.

தள்ளுபடி

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாலும், 44 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடித்துவிட்டதாலும் விசாரணையை கேரளாவுக்கு மாற்றுவது பொருத்தமாக இருக்காது. எனவே, வழக்கு விசாரணையை கேரளாவுக்கு மாற்றக்கோரி ரகு கணேஷ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என உத்தரவிட்டது.


Next Story