ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீதான வழக்கு ரத்து


ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீதான வழக்கு ரத்து
x
தினத்தந்தி 25 March 2023 12:15 AM IST (Updated: 25 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது பதிவான வழக்கை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது பதிவான வழக்கை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

சசிகலாவுக்கு சொகுசு வசதிகள்

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாகவும் கடந்த 2017-ம் ஆண்டு சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

அத்துடன் பரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடப்பதாக கூறி தலைமை செயலாளருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா அறிக்கை அளித்திருந்தார். இந்த சம்பவம் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்று விட்டார். அதே நேரத்தில் பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடு விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமாருக்கு, கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது.

ஊழல் தடுப்பு படையில் வழக்கு

மேலும் ரூ.2 கோடி லஞ்ச விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஊழல் தடுப்பு படைக்கும் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதி அரசு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி, சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கைமாறிய விவகாரம் தொடர்பாக சத்திய நாராயணராவ் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். இதனால் சத்திய நாராயணராவ் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

பின்னர் தன் மீது ஊழல் தடுப்பு படையில் பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டிலேயே சத்திய நாராயணராவ் வழக்கு தொடர்ந்தார். அதன்படி, இவ்வழக்கின் விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி ரவி.வி.ஒசமணி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார்.

குற்றப்பத்திரிகையில் பெயர் இல்லை

அப்போது ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி சத்திய நாராயணராவ் மீது ஊழல் தடுப்பு படையில் பதிவான வழக்கை ரத்து செய்வதாகவும், இந்த வழக்கை முடித்து வைப்பதாகவும் நீதிபதி ரவி.வி.ஒசமணி உத்தரவு பிறப்பித்தார். அதாவது ரூ.2 கோடி லஞ்சம் மற்றும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக வினய்குமார் தலைமையிலான குழு அரசுக்கு அறிக்கை அளித்திருந்தது.

அந்த அறிக்கையை கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி அரசு வெளியிட்டு இருந்தது. அதில், மனுதாரர் (சத்திய நாராயணராவ்) நிரபராதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரூ.2 கோடி லஞ்ச வழக்கில் ஊழல் தடுப்பு படை போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூட சத்திய நாராயணராவின் பெயர் சேர்க்கப்படவில்லை. சிறை அதிகாரிகள் பெயர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.

கோர்ட்டில் முறையிடுவதற்கும்...

எனவே மனுதாரர் தொடர்ந்த வழக்கை இனியும் தொடர வேண்டிய அவசியமில்லை. அதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிபதி ரவி.வி.ஒசமணி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்த லஞ்ச விவகாரத்தில் சத்திய நாராயணராவ் மீது அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால், அதுதொடர்பாக கோர்ட்டில் முறையிடுவதற்கும் மனுதாரருக்கு அவகாசம் வழங்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக தன் மீது கூறப்பட்ட ரூ.2 கோடி லஞ்ச புகார் வழக்கில் இருந்து சத்திய நாராயணராவ் விடுவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story