சோயப் அக்தருடன் செல்பி எடுத்து பகிர்ந்த சசி தரூர்... இரண்டு அக்தரா..? என கலாய்த்த நெட்டிசன்கள்
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருடன், எம்.பி. சசி தரூர் செல்பி புகைப்படம் எடுத்து அதனை டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர் துபாயில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்படும்போது, பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருடன் ஒன்றாக செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார்.
அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். விமான நிலையத்தில் அக்தருடன் நடந்த உரையாடல்களையும் பற்றி அவர் குறிப்பிட்டார்.
அதில், துபாய் வழியே டெல்லிக்கு திரும்பும் வழியில், என்னை சந்தித்து ஹலோ என்று சோயப் அக்தர் கூறியதும் ஆனந்தமும், ஆச்சரியமடைந்தேன். என்ன ஒரு நேர்த்தியான மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளர் அவர். நம்முடைய நாட்டில் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
என்னை வாழ்த்த வந்த இந்தியர்கள் அனைவரும் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து கொள்ள விரும்பினார்கள். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் கிரிக்கெட் (தவிர்க்க முடியாமல்) பற்றி நல்லதோர் உரையாடல் மேற்கொண்டோம் என குறிப்பிட்டு உள்ளார்.
அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர். அந்த புகைப்படத்தில் இருவரின் உருவ ஒற்றுமையையும், பலரும் பார்க்க தவறவில்லை. அவர்கள் இருவரும் உருவத்தில் எப்படி ஒத்திருக்கின்றனர் என பயனாளர்கள் பலரும் விமர்சனம் தெரிவித்து உள்ளனர்.
அவர்களில் ஒருவர் சகோதரா, நான் 2 சோயப் அக்தர் என நினைத்து விட்டேன் என்றும் என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு இரட்டை பார்வை வந்து விட்டதோ என சோதனை செய்து கொண்டேன் என மற்றொருவரும் தெரிவித்து உள்ளனர்.
இதேபோன்று ஒருவர், எல்லையால் பிரிக்கப்பட்ட போதிலும், சிகையலங்காரத்தில் இரண்டு பேரும் ஒன்றுபட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.