சரத் பவார் பேரனின் ரூ.50 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
ரோகித் பவாரின் பாராமதி ஆக்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலையை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநில கூட்டுறவுத் துறையில் சர்க்கரை ஆலைகளை மோசடியான முறைகளில் விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த மும்பை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ந் தேதி உத்தரவிட்டது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி 5-ந்தேதி மும்பை பாராமதி பகுதியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் மருமகன் வழிப் பேரனும், எம்.எல்.ஏ.வுமான ரோகித் பவாருக்கு சொந்தமான பாராமதி ஆக்ரோ நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் இது குறித்து அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி ரோகித் பவார் விளக்கமளித்தார்.
இந்த நிலையில் மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள ரூ.50 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலையை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று முடக்கியுள்ளனர். இந்த சர்க்கரை ஆலை ரோகித் பவாரின் பாராமதி ஆக்ரோ நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சர்க்கரை ஆலையை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.